full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

சினிமாவை விட்டு ஒதுங்கும் முடிவில் நயன்தாரா?

N

நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதல் விவகாரம் பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் இதையே பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்கள். நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் இருவரும் காதல் வயப்பட்டதும், பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்துகொண்டதும் பழைய கதை. இருவருக்கும் ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டது என்றும் கிசுகிசுத்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் நயன்தாரா பேசும்போது, “எனது வருங்கால கணவருக்கு நன்றி” என்று சொன்ன வார்த்தை சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதன்மூலம் விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதை அவர் உறுதிப்படுத்தி இருப்பதாக கூறப்பட்டது.

கேரளாவில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்க ரகசியமாக நிச்சயதார்த்தம் நடத்தியதாக தகவல் கசிந்துள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்த பிறகே இருவரும் அமெரிக்காவுக்கு பறந்து ஜாலியாக சுற்றிவிட்டு கேரளா திரும்பி உள்ளனர். அமெரிக்காவில் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் டுவிட்டரில் வெளியிட்டனர்.

இந்த படங்கள் குறித்த கேள்விக்கு, “நான் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறேன்” என்று விக்னேஷ் சிவன் பதில் அளித்தார். நயன்தாராவுக்கு இப்போது இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா, தெலுங்கில் ‘சை நரசிம்ம ரெட்டி’ என்று கைநிறைய படங்கள் இருக்கிறது. அஜித்குமாரின் விசுவாசம் படத்துக்கும் ஒப்பந்தமாகி உள்ளார்.

மறைந்த ஆந்திர முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டி வாழ்க்கை வரலாறு படத்திலும், அவரது மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க பேசி வருகின்றனர். அடுத்த சில மாதங்கள் சினிமாவில் ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டு இருப்பார் என்றும், இந்த வருடம் இறுதியில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடக்கும் என்றும் இருவருக்கும் நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கும் முடிவில் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.