பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் பிசியாக இருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதே நேரத்தில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், வேலைக்காரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா மீண்டும் நடிக்க இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.
இந்த தகவல் குறித்து இயக்குநர் ராஜேஷிடம் கேட்ட போது, அவர் அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க நயன்தாராவுடன் பேசி வருகிறோம். அதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில் நயன்தாரா ஒப்பந்தமாவார் என்று எதிர்பார்க்கிறோம். எனினும் எதுவும் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. சாய் பல்லவி நடிக்க இருப்பதாக வெளியான தகவல் குறித்து கேட்ட போது, சாய் பல்லவியுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அது வெறும் புரளி தான் என்றார். மேலும் மற்ற கலைஞர்கள் தேர்வு விரைவில் நடைபெற இருக்கிறது.
நயன்தாரா ஏற்கனவே ராஜேஷ் இயக்கத்தில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.