தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் கிராமத்தில் அம்பரப்பர் மலை உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த பசுமையாக காணப்படும் இந்த பகுதியில் மத்திய அரசு நியூட்ரினோ ஆய்வு மையம் தொடங்க முடிவு செய்துள்ளது.
இந்த மையம் நியூட்ரினோ துகள்களை ஆய்வு செய்து பூமியில் ஏற்படக்கூடிய இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே அறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதன்படி கடந்த 2010-2011-ம் ஆண்டு இதற்காக ரூ.1520 கோடி திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டது. முதல்கட்டமாக ரூ.100 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. இதனைத் தொடர்ந்து பொட்டிபுரம் மேற்கு தொடர்ச்சி மலையில் 110 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட்டது.
சுமார் 2 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மெகா மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. அதன் பின்னர் 2 கி.மீ சுற்றளவுக்கு வேலியும் அமைக்கப்பட்டது.
இந்த பகுதியைச் சுற்றி பெரியாறு பாசன கால்வாய் மூலம் நெற்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. எனவே நியூட்ரினோ ஆய்வு மையம் அமைந்தால் விவசாயம் அழிந்து விடும். கதிர் வீச்சுகளால் குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறக்கும். நிலத்தடி நீர் மட்டம் பாதிக்க கூடும் என விவசாயிகள் அடுக்கடுக்காக புகார்கள் தெரிவித்தனர். அதோடு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது.
அதனைத் தொடர்ந்து கட்டுமான பணிகள் 2 வாரமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது மத்திய அரசின் கேபினட் செயலாளர் சின்கா நியூட்ரினோ திட்டத்துக்கு தமிழக அரசின் மாநில சுற்றுச் சூழல் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
எனவே இதற்கு எப்படியும் தமிழக அரசு இப்போதுள்ள அரசியல் சூழலை கருதி அனுமதி வழங்கி விடும் என விவசாயிகள் ஆதங்கப்பட்டுள்ளனர். இந்த தகவல் அனைத்து பகுதி கிராமங்களுக்கும் பரவியது. இதனால் தேவாரம், டி.புதுக்கோட்டை, ராமகிருஷ்ணாபுரம், பொட்டிபுரம், குரங்கனி மற்றும் அதனை சுற்றியுள்ள 15 கிராம மக்கள் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், நியூட்ரினோ ஆய்வு மையத்தால் எங்களது கிராமத்தில் விவசாயமே அழிந்துவிடும். இதற்கு தமிழக அரசு அனுமதிக்க கூடாது. அதனை மீறி இந்த திட்டம் தொடங்கப்பட்டால் நாங்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.