கிராமத்தில் பட்டப்படிப்பு படித்துவிட்டு கிடைத்த வேலையும் விட்டுவிட்டு மனசுக்கு பிடித்த ஆர்கானிக் விவசாயம் செய்யும் துடிப்பான இளைஞனாக இருக்கிறார் என்.ஜி.கே (நந்த கோபாலன் குமரன்). இவரை சுற்றி பல இளைஞர்களும் இவருடைய செயலால் ஈர்க்கப்படுகிறார்கள். விவசாயம் செய்துகொண்டு ஊர் மக்களுக்கு தன்னால் முடிந்த சில உதவிகளையும் செய்துவருகிறார்.
அரசியலும் அதிகாரமும் இல்லாமல் ஒரு கட்டத்திற்குமேல் மக்களுக்கு உதவிகள் எதையும் என்.ஜி.கேவால் செய்ய முடியவில்லை. இதனால் தன்னை அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார் சூர்யா.
மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசியல் களம் நோக்கி நகரும் சூர்யாவிற்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன? அவற்றை அவர் எவ்வாறு எதிர்கொண்டு முதல்வர் ஆகிறார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
சாதாரண தொண்டனாக ஒரு கட்சியில் இணைந்து அதே கட்சிக்கு எப்படி சூர்யா தலைமை ஏற்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.
சூர்யாவிற்கு இது முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம். துடிப்பான இளைஞனாக வரும் சூர்யா இயல்பான தன்னுடைய நடிப்பால் இதயம் ஈர்க்கிறார். இவருக்கு ஜோடியாக இணைந்திருக்கும் சாய் பல்லவியின் நடிப்பு திரைப்படத்தை அலங்கரிக்கிறது. அரசியல் வாதிகளின் ஆலோசகராக வரும் ரகுல் ப்ரீத் சிங் படம் முழுவதும் ஸ்கோர் செய்கிறார்.
இவர்களோடு பாலசிங், பொன்வன்னன், ராஜ்குமார் மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை கச்சிதமாக முடித்துக்கொடுத்திருக்கிறார்கள்.
நீண்ட நாட்களுக்கு பிறகு செல்வராகவன் சூழுலுக்கு ஏற்ற ஒரு அரசியல் பார்வையை திரைக்கு கொண்டு வந்திருக்கிறார். எதிர் எதிர் துருவங்களில் அரசியல் கட்சிகள் செயல்படுவதும், தங்களுக்கு போட்டியாக ஒருவன் வருகிறான் என்று தெரிந்தால் அவனை அழிக்க நினைப்பது அரசியல் கட்சிகளில் எழுதப்படாத விதியாக இருக்கிறது. என்பதை பலத்திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம்.
உதாரணத்திற்கு முதல்வன் போன்ற படங்களில் நாம் பார்த்திருந்தோம். அதே போன்ற காட்சிகள் இந்த படத்திலும் இடம் பெற்றிருந்தது. இருதுருவ அரசியல் கண்ணோட்டத்தை வைத்தே படம் நகர்கிறது. சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி படத்தையும் இப்படம் நியாபகப்படுத்தியது. இன்னும் கூட செல்வராகவன் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கலாமோ என்று தோன்றியது.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள், பின்னணி இசை படத்திற்கு வலு சேர்க்கிறது. சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவு காட்சிகளை படத்தோடு இணைந்து பயணிக்க வைக்கிறது. அரசியலுக்கு சூர்யா புதிது என்றாலும் அவர் கற்றுக்கொண்ட பாடம் அதிகம் இந்த படத்தில் என்றே செல்லலாம்.