-
திரையெங்கும் பச்சைப் பசேலென்று விரியும் காட்சிகளோடு, செவிப்பறை அதிர்ந்து கிழியும் படியான ஒலியதிர்வுகள் இல்லாமல் மிக சாதாரணமான மிக இயல்பான ஒரு தமிழ் சினிமா இந்த “நிமிர்”.
பகத் பாசில் நடித்த “மகேஷிண்டே பிரதிகாரம்” என்ற மலையாள படத்தின் தமிழ் பதிப்பு தான் இந்த நிமிர். அதனால் தான் என்னவோ படம் நெடுகிலும் மலையாள சினிமாவின் சாயல். இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு நிச்சயமாக “நிமிர்” ஒரு புதிய அனுபவத்தைத் தரும்.
- உதயநிதி ஸ்டாலின் தன்னை ஒரு நடிகனாக நிரூபித்துவிட நிறைய மெனக்கெடுகிறார் அடுத்தடுத்து. தந்தைக்கு மகனாக, காதலைத் தொலைத்தவனாக, தன்னை அடித்தவனை திருப்பி அடிக்கும் வரை செருப்பணிய மாட்டேன் என வைராக்கியம் கொள்பவனாக “நேஷனல் செல்வம்” கேரக்டருக்கு அப்படியே பொருந்தியிருக்கிறார்.. ஃபகத்தினை முன்வைத்து உதயநிதியை பார்க்கும் போது மட்டுமே இன்னும் கூட அவர் முகபாவங்கள் காட்ட மெனக்கெட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
பார்வதி நாயர், நமீதா புரமோத் என இரண்டு நாயகிகள். இருவரில் நமீதா புரமோத் மனதில் நிற்கிறார், அம்புட்டு அழகு. வெறும் அழகு மட்டுமல்லாமல் நன்றாக நடிக்கவும் செய்கிறார் நமீதா. அந்த பெரிய விழிகளைக் கொண்டு அவர் பார்ப்பதெல்லாம்… நிச்சயம் இந்த ஆண்டின் கனவுக் கன்னியாக நமீதா புரமோத் ரசிகர்கள் மனதில் மையம் கொள்வார்.
கருணாகரன், கஞ்சாகருப்பு, சண்முகராஜன், கஞ்சா கருப்பு, ஆரோக்கிய தாஸ் என அனைவருமே தாறுமாறாய் சிரிப்பு மூட்டியிருக்கலாம். அதிலும் ஆரோக்கியதாஸ் துக்க வீட்டில் பஞ்சாயத்து செய்யும் காட்சியும், கஞ்சா கருப்பு நெல்லிக்காய் விற்கப் போகுமிடத்தில் நடப்பதும் கண்டிப்பாய் உங்களை சிரிக்க வைக்கும்.
அனுபவம் மிக்க நடிப்பு என்றால் என்னவென்று, இயக்குநர் மகேந்திரன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கரைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம். அநாயசமாக நடிக்கிறார்கள் இருவரும். இருந்தாலும் எம்.எஸ்.பாஸ்கர் அதிகம் ஈர்க்கிறார். சமுத்திரக்கனியை அடிப்பதற்காக உதயநிதி வேகமாக போகும் போது கூட செல்லும் எம்.எஸ்.பாஸ்கரின் அந்த நடை, சூப்பர்!
பிரியதர்ஷன், கவித்துவமான படைப்புகளுக்குச் சொந்தக்காரர். இப்படத்தையும் மெல்லிய வார்த்தைகளைக் கொண்டவொரு புதுக்கவிதையாக வடித்திருக்கிறார். இவருக்குத் துணையாக வசனம் எழுதி, சில காட்சிகளில் நடிக்கவும் செய்திருக்கிறார் சமுத்திரக்கனி. அந்த வெள்ளையப்பன் கேரக்டருக்கு படத்தில் ஒன்றுமில்லை என்றாலும், வசனங்களில் இடத்தைத் தக்க வைக்கிறார் சமுத்திரக்கனி.
தர்புகா சிவா 4 பாடல்களும், அஜ்னீஷ் லோக்நாத் இரண்டு பாடல்களுக்கும் இசையமைத்திருக்கிறார்கள். அத்தனையும் மயிலிறகாய் வருடும் மெல்லிசைத் தாலாட்டு. அதிலும் தாமரையின் வரிகளில் “நெஞ்சில் மாமழை” பாடல் செவிகளுக்கு பூவிதழ் ஒத்தடம்.
படத்தின் பெரிய பலம் இவர்தான், ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம். ஆற்றில், மழை நேரத்தில் என அந்தி நீர்த்திவளைகளை எல்லாம் அவர் படம்பிடித்திருக்கும் விதம், அற்புதம். படத்தின் ஆரம்பத்தில் வரும் பாடலில் ஏகாம்பரத்தின் கேமரா கவிதையாய் பேசியிருக்கிறது. “ஒரு நிமிடத்திற்கு அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை, ஒரு தருணமாக உணரும் கண்கள் வேண்டும்” என்று மகேந்திரன் ஒரு வசனம் பேசுவார், அதை அப்படியே என்.கே.ஏகாம்பரம் செய்து காண்பித்திருத்திருக்கிறார். ஒளிப்பதிவிற்காக படத்தை மீண்டுமொரு முறை படம் பார்க்கலாம்.
- நகைச்சுவை என்றாலே இரட்டை அர்த்த வசனமும், மற்றவரை உருவத்தைக் கொண்டு கேலி செய்வதும் தான் என்றான காலகட்டத்தில், “நிமிர்” நிச்சயமாக ஒரு நல்ல சினிமா தான். சில குறைகளை பொறுத்தால் “நிமிர்” அத்தனை மென்மை, அத்தனை அழகு!