மத்திய மந்திரி சபையில் வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரியாக இருப்பவர் நிர்மலா சீதாராமன். தமிழ்நாட்டில் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டு வந்தால் மத்திய அரசு ஒத்துழைக்கும் என்று அவர் சமீபத்தில் தெரிவித்தார். வர்த்தக மந்திரியாக இருக்கும் நிர்மலா சீதாராமன் சுகாதாரத் துறை தொடர்பாக கருத்து தெரிவித்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருந்தது.
வர்த்தக மந்திரி நீட் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதேபோல கம்யூனிஸ்டு கண்டனம் தெரிவித்து இருந்தது. இதற்கு தமிழக பாரதீய ஜனதா தலைவர்களும் விளக்கம் அளித்து இருந்தனர்.
ஆனால் பாரதீய ஜனதா மேலிடமோ நிர்மலா சீதாராமனை தமிழக அரசியலில் முன்னிலைப்படுத்தும் முடிவை மேற்கொண்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றன. 2019 பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து சில தொகுதிகளைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் பா.ஜனதா தீவிரமாக இருக்கிறது. மாநில பா.ஜனதாவின் செயல்பாடுகள் அமித்ஷாவுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால் புதிய தலைமை கொண்டுவர திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாகவே நிர்மலா சீதாராமன் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார். ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. அவரது ஆலோசனைதான். தற்போது நீட் தேர்வுக்கு அது மாதிரியான ஆலோசனையை வழங்கி உள்ளார்.
இதனால் தமிழக பாரதீய ஜனதாவில் அவருக்கு முக்கிய பொறுப்பு கொடுத்து கட்சியைப் பலப்படுத்த பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டுள்ளது. அவருக்கு தமிழ்நாட்டில் கட்சி பொறுப்பு எதுவும் இல்லை. பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 22-ந் தேதி தமிழ்நாடு வருகிறார். அப்போது அவர் நிர்மலா சீதாராமனுக்கு புதிய பொறுப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிர்மலா சீதாராமன் மதுரையில் பிறந்தவர். திருச்சியில் கல்வி பயின்றவர். மோடி மந்திரி சபையில் உள்ள திறமையான மந்திரிகளில் ஒருவராவார்.
ஆனால் தமிழகத்தில் நிர்மலா சீதாராமனை முன்னிறுத்த உள்ளதாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை என மாநில பா.ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசுகையில் நிர்மலா சீதாராமன் மட்டுமல்ல, யாரைக் கொண்டுவந்தாலும் தமிழகத்தில் பாஜகவால் நுழைய முடியாது.” என்றார்.