ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்துடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, பீகார் முதல்-மந்திரி பதவியை நேற்று திடீரென்று ராஜினாமா செய்த நிதிஷ்குமார், பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சி அமைக்க முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து காட்சிகள் வேகமாக அரங்கேறின.
நிதிஷ்குமார் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பீகார் மாநில பாரதீய ஜனதா தலைவர் சுஷில்குமார் மோடி நேற்று மாலை கவர்னர் மாளிகைக்குச் சென்று கவர்னர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து, நிதிஷ்குமார் புதிய அரசு அமைக்க பாரதீய ஜனதா ஆதரவு அளிப்பதாக கூறி கடிதம் கொடுத்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், “நிதிஷ்குமார் தலைமையில் அமையும் புதிய அரசில் பாரதீய ஜனதா இடம்பெறும்.” என்றார்.
அதன்பிறகு இரவில் நிதிஷ்குமாரின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மற்றும் ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாரதீய ஜனதா, ஐக்கிய ஜனதாதளம், லோக்ஜனசக்தி, ராஷ்ட்ரீய லோக்சமதா கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் சட்டசபை தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக (முதல்-மந்திரி) நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, கவர்னரின் அழைப்பை ஏற்று பீகாரின் புதிய முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் இன்று (வியாழக்கிழமை) பதவி ஏற்கிறார். அவரது மந்திரிசபையில் பாரதீய ஜனதாவும் இடம்பெறுகிறது.
முதல் நாளில் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார் மறுநாளே மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்பது குறிப்பிடத்தக்கது.