வடகொரியா சமீபத்தில் 6-வது தடவையாக அணுகுண்டு சோதனை நடத்தியது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா முயற்சியால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது.
அதன் பிறகாவது வட கொரியா ஏவுகணை சோதனைகள் மற்றும் அணுஆயுத சோதனையை நிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வடகொரியா தன் நிலையில் இருந்து மாறவில்லை. மாறாக கடந்த மாதம் மீண்டும் ஒரு ஏவுகணையை வீசி சோதனை நடத்தியது.
சுமார் 3200 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய சக்தி வாய்ந்த ஏவுகணை வடகொரியாவின் சுனான் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி செலுத்தப்பட்டு, ஜப்பான் நாட்டின் மீது பறந்து சென்று, பசிபிக் கடலில் விழுந்தது. ஜப்பான் நாட்டில் உள்ள குவாம் தீவில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறி வைத்து, மிரட்டுவதற்காக இந்த ஏவுகணை செலுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
வடகொரியாவின் இந்த அத்துமீறலைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை அவசரமாக கூடியது. இந்த கூட்டத்தின் போது பாதுகாப்பு சபையில் உள்ள 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் வடகொரியாவின் போக்கிற்கு கண்டனம் தெரிவித்தனர். வடகொரியா மீது மேலும் சில புதிய தடைகளையும் அமெரிக்கா விதித்தது.
வடகொரியாவுடன் இனி அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதில் பயனில்லை. தகுந்த வழியில் பாடம் கற்பிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு ஜப்பான் போருக்குத் தயாரானால் அந்த நாட்டை தவிடு பொடியாக்கி விடுவோம் என்று வடகொரியா இன்று எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக, வடகொரியா அரசுக்கு ஆதரவான செய்தி நிறுவனம் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் போர்தரகு வேலைகளை ஜப்பான் சாதகப்படுத்திக் கொள்ள முயற்சித்தால் இதில் ஜப்பான் வெற்றிபெற முடியாது. வடகொரியா படைகளின் தாக்குதல்களை ஜப்பானால் எதிர்கொள்ள முடியாது.
கொரிய தீபகற்பத்தில் போர் வெடித்தால் ஜப்பானால் ஒரு போதும் பாதுகாப்பாக இருக்க முடியாது. போருக்காக அங்கு நிலைநிறுத்தப்படும் (குவாம் தீவில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம் உள்பட) அனைத்தும் தவிடு பொடியாகி விடும். அமெரிக்காவின் ஆதரவு என்ற பலத்துடன் போருக்கான ஆயத்தத்தில் ஜப்பான் ஆட்சியாளர்கள் இறங்கினால் மீளமுடியாத துரதிர்ஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதை கடுமையாக எச்சரிக்க விரும்புகிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.