full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஓவியம் மட்டுமல்ல மிரட்டுவதிலும் நான் கில்லாடி என்று நிரூபித்திருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தன் திறமையை ஓவியங்கள் மூலம் நிரூபித்த இவர், தற்போதைய நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார்.
இவர் ஏற்கனவே ஆந்திராமெஸ் படத்தில் வில்லனாக நடித்து மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார். தற்போது கதிர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜடா’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு வில்லனின் கதாபாத்திரம் பார்க்கும் ரசிகர்கள் கோபப்பட வைப்பதுதான். அந்த கோபத்தை பார்ப்பவர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறார் ஏ.பி.ஸ்ரீதர். படத்தின் இவருடைய அறிமுக காட்சியிலும் சரி, மகனுக்காக பழிவாங்கும் காட்சியிலும் சரி பார்வையிலேயே மிரட்டி இருக்கிறார்.
பக்கம் பக்கமாக வசனங்கள் பேசி கவர நினைப்பவர்கள் பலர் இருப்பினும், பார்வையாலயே மிரட்ட தனித்தன்மை வேண்டும். அந்த தனித்தன்மையை பெற்று இருக்கிறார் ஏ.பி.ஸ்ரீதர். இவரது மிரட்டலான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. ஓவியம் மட்டுமல்ல நடிப்பிலும் நான் கில்லாடி என்பதை தற்போது நிரூபித்திருக்கிறார் ஸ்ரீதர்.
இப்படம் குறித்து ஏ.பி.ஸ்ரீதர் கூறும்போது, ‘அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியிருக்கும் ஜடா திரைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் நடிக்க என்னை அணுகினார்கள். இப்பொழுது படத்தை பார்த்த அனைவரும் என்னை பாராட்டுகிறார்கள். என்னுடைய நடிப்புக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் படக்குழுவினருக்கே சேரும். பொயட் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கதிர் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். சாம்.சி.எஸ். இசையமைக்க, சூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிச்சர்ட் படத்தொகுப்பை கவனித்துள்ளார். இவர்களின் கூட்டு முயற்சியால் என்னுடைய நடிப்பு கவனம் பெற்றிருக்கிறது. தற்போது இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.