சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் பார்த்திபன், “ஓட்டு போட்ட மக்களுக்கு கேள்வி கேட்க உரிமை இருக்கிறது. நான் அரசுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ பேசவில்லை. இந்தந்த துறைகளில் இதுமாதிரி பிரச்சினைகள் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினால், அதற்கு பதில் அளிக்க வேண்டியது அமைச்சர்கள் பொறுப்பு.
ஒரு துறையில் தவறு நடந்து விட்டது. மேற்கொண்டு நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என்று அவர்கள் பதில் சொல்லலாம். அதைவிடுத்து ‘நீங்கள் நிரூபியுங்கள்… பார்க்கலாம்’, என்று சொல்வது தேவையற்றது.
சினிமாவில் இருக்கும் பலருக்குத் தைரியம் இல்லை. தங்கள் படங்களுக்கு பிரச்சினை வந்துவிடுமோ? என்று பயப்படுகிறார்கள். பொதுமக்களே பயம் இல்லாமல் இருக்கும்போது, தகுதியோடு இருக்கிற ஒரு நடிகன் தவறைச் சுட்டிக்காட்டுவது வரவேற்கத்தக்கது.
‘கேளிக்கை வரி பிரச்சனையில் என்னைத் தவிர மற்ற எல்லோரும் லஞ்சம் கொடுத்து தான் வரிவிலக்கு பெறவேண்டியது இருக்கிறது’, என்று கமல்ஹாசன் கூறிய குற்றச்சாட்டு உண்மையானது. இதற்கு முன்பு என் படத்துக்கும் பணம் கேட்கப்பட்டது. ஆனால் நான் கொடுக்கவில்லை.
எல்லா படங்களுக்கும் வியாபாரத்துக்கு தகுந்தவாறு ‘யு’ சான்றிதழ் கொடுத்த பிறகு, கேளிக்கை வரி விலக்கு பெற பணம் கேட்கப்படுகிறது. பணம் கேட்பவர்கள் நேரடியாக வாங்காமல் சுற்றி வளைத்து கேட்கிறார்கள். திரையுலகினரும் படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டு நஷ்டம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற அச்சத்தில் பணத்தை கொடுக்க முன்வருகிறார்கள். இது இந்த ஆட்சியில் மட்டுமல்ல கடந்த ஆட்சியிலும், அதற்கு முந்தைய ஆட்சியிலும் நடந்துள்ளது.” என்று கூறினார்.