full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

அணிகள் இணைப்பு குறித்து இன்று முடிவு : ஓ பன்னீர்செல்வம்

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்தப்படும் என்றும், அவர் வாழ்ந்த வேதா இல்லம் நினைவிடமாக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதையடுத்து அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சிகள் மீண்டும் தீவிரமாகி உள்ளது. இது தொடர்பாக இரு அணி தலைவர்களும் இன்றிரவு சந்தித்து பேசத் திட்டமிட்டுள்ளனர்.

அப்போது அதிகாரப் பகிர்வுகள் மற்றும் சசிகலா குடும்பத்தை முழுமையாக ஒதுக்குவது பற்றி விவாதிக்கப்பட உள்ளது. இதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் கிரின்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி முக்கிய நிர்வாகிகளுக்கு நேற்று இரவு தொலைபேசி மூலம் அழைப்பு கொடுக்கப்பட்டது.

ஓ.பி.எஸ். ஆதரவு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த அவசர அழைப்பை ஏற்று நிர்வாகிகள் இன்று சென்னை வந்தனர். ஓ.பி.எஸ். தலைமையில் மாலையில் நடக்கும் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் மதுசூதனன், கே.பி.முனுசாமி, செம்மலை, பி.எச்.பாண்டியன், மைத்ரேயன், ம.பா.பாண்டியராஜன், நத்தம் விசுவநாதன், மனோஜ் பாண்டியன், ராஜகண்ணப்பன், கே.சி.பழனிசாமி உள்ளிட்டவர்கள் இடம்பெறுகிறார்கள்.

கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் 2 அறிவிப்பு குறித்து ஆலோசிக்கப்படுகிறது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை, போயஸ் கார்டன் நினைவிடமாக்குதல் போன்ற நடவடிக்கையின் மூலம் இணைப்புக்கான சாதகமான சூழ்நிலை குறித்து விவாதிக்கப்படுகிறது.

இது குறித்து இன்று பேட்டி அளித்த ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அணிகள் இணைப்பு தொடர்பான முடிவு அறிவிக்கப்படும் என கூறினார்.