ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ திரைவிமர்சனம்

cinema news movie review

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ திரைவிமர்சனம்.

நடிகர்கள் முனீஷ்காந்த்,யூடியூப் புகழ் கோபி – சுதாகர் சத்யமூர்த்தி, ஜார்ஜ் மரியான், நடிகைகள் யாஷிகா, ரித்விகா, ‘எரும சாணி’ சேனல் புகழ் விஜய், ஹரிஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’. த.ராஜன் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரமேஷ் வெங்கட் இயக்கியுள்ளார். கௌஷிக் க்ரிஷ் இசையமைத்துள்ளார். வருடக் கடைசியில் காமெடி – பேய் ஜானரில் வெளியாகியுள்ள இந்தத் திரைப்படம் எப்படி இருக்கு?

திரைப்படம் தொடங்கிய சிறிது நேரத்தில் மர்மங்களும் அமானுஷ்யங்களும் கிச்சு கிச்சு மூட்டியபடி வரிசையாக அரங்கேறுகிறது. அரண்டு போகும் இந்தக் குழு, திரையரங்கை விட்டு தப்பிக்க முயன்றாலும் மீண்டும் திரையரங்குக்குள்ளேயே வந்து சேர்கிறார்கள். இதற்கான காரணம் என்ன? பேய் பிடித்த திரையரங்கில் இந்தக் குழு மாட்டிக் கொண்டு எப்படி போராடியது, 25ஆண்டு மர்ம முடிச்சுகளுக்கு விடை கிடைத்ததா என்பதை போராட்டத்துடன் நமக்கும் கடத்தியிருக்கிறார்கள்

கோபி – சுதாகர், ‘எரும சாணி’ டீம் என யூடியூபில் நாம் அன்றாடம் பார்த்து ரசிக்கும் முகங்கள் திரையில் தோன்றியிருக்கிறார்கள். ஆனால் இவர்களது யூடீயூப் சேனலில் ஒர்க் அவுட் ஆகும் காமெடி இங்கே பெரிதாய் எடுபடவில்லை.

1993இல் தொடங்கி திரையரங்குக்குள் இந்தக் குழு நுழையும் வரை, சிறப்பாக திகில் எஃபெக்ட் தந்து ஹைப் ஏற்றி நம்மை ஒன்ற வைக்கிறார்கள். ஆனால் காமெடி – பேய் எனும் ஜானரில் பின்னது குறைந்து முன்னது ஓவர் டோஸ் ஆகியுள்ளது.

சுமாரான படத்தை வாங்கி விட்டு வில்லத்தனமான ப்ரொடியூசராக முனீஷ்காந்த் ஆங்காங்கே மிரட்டுகிறார். யாஷிகா, கோபி – சுதாகர், எரும சாணி’ சேனல் புகழ் விஜய், ஹரிஜா என அனைவரும் புதிதாக பெரிதும் முயலாமல், வழக்கமாக இந்த ஜானர் படங்களுக்கு தேவையானதை திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

காமெடி, பேய் இரண்டில் முதல் பாதியில் காமெடி மட்டுமே கொஞ்சம் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. படத்தின் தொடக்கத்தில் தரப்படும் பில்ட் அப், பேயை அறிமுகப்படுத்தியதும் புஸ்ஸ் என வடிந்துவிடுகிறது. பேய்களுக்கான ஃப்ளாஷ்பேக் எல்லாம் ‘அட போங்க பாஸ் விளையாடாதீங்க’ எனும் ரேஞ்சில் தான் இருந்தது. கொஞ்சமாவது பேய்க்கு உண்டான மரியாதையைக் கொடுத்து இரண்டாம் பாதியில் நம்மை பயமுறுத்த முயற்சித்திருக்கலாம். பேய்களில் சில பேய்கள் இரண்டாம் பாதியில் காணாமல் வேறு போகின்றன.

முதல் பாதி பிடிப்பு இல்லாமல் இரண்டாம் பாதி பல யூடர்ன்கள் போட்டு எங்கெங்கோ பயணிக்கிறது. கௌஷிக் க்ரிஷ்ஷின் இசையில் 2 பாடல்கள் ஓகே ரகம். ஆனால் பேய்க்கதை எனும் ஜானரில் பின்னணி இசையில் மிரட்ட முயற்சித்திருக்கலாம். ஜோஷூவா ஜோசப்பின் கேமரா திரையரங்குக்குள் திகில் கூட்டி இருக்கிறது.

காமெடி -பேய் கூட்டணி ஓகே. ஆனால் பேய்க்கு உருக்கமான ஃப்ளாஷ்பேக் வைத்துவிட்டு, பின் அவர்களை ஊறுகாய் ஆக்கி காமெடி செய்யவெல்லாம் வைத்திருப்பது பெரும் அயர்ச்சிக்குள்ளாக்குகிறது. சுயபகடி செய்வது போல் படத்தில் ஒரு பேய் படத்தை தொடர்ந்து கலாய்த்துக் கொண்டே இருக்கிறார்கள். மொத்தத்தில் படத்தின் தலைப்பை காரணத்துடன்தான் வைத்திருக்கிறார்கள்