full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!

இளைஞர் பட்டாளத்தை கவர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதற்கு காரணம் அவர்களின் எதிர்பார்ப்புகளும், ரசனையும் வேறொரு பரிமாணத்தில் இருக்கின்றது என்பது தான். ஆனால் தங்களின் புதுமையான நகைச்சுவை காணொளிகள் மூலம், இளம் ரசிகர்களின் பாராட்டுகளை மிக எளிதாக பெற்று – யு டியூப் சமூக வலைத்தளத்தில் கலக்கி கொண்டு இருக்கும் “எரும சாணி” குழுவினர்.

இவர்கள் தற்போது “கிளாப்போர்டு” தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வி சத்யமூர்த்தி தயாரிக்கும் “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” திரைப்படத்தில் பணியாற்ற இருக்கின்றனர். “எரும சாணி” காணொளிகளின் இயக்குநர் ரமேஷ் வெங்கட், இந்த “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அடியெடுத்து வைப்பது குறிப்பிடத்தக்கது.

வி. சத்யமூர்த்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” திரைப்படத்தில் “எரும சாணி” புகழ் விஜய் – ஹரிஜா, ஆர் ஜே விக்கி, “மெட்ராஸ் சென்ட்ரல்” புகழ் கோபி – சுதாகர் “டெம்பில் மங்கிஸ்” புகழ் ஷாரா – அகஸ்டின் ஆகியோர் மிக முக்கிய கதாபத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் இத்திரைப்படத்திற்கு ஒரு தனி சிறப்பும் இருக்கின்றது. இந்த படத்தில் பணியாற்றும் நடிகர் – நடிகைகள் முதல் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அனைவருமே 21 வயதிற்கு கீழ் தான். இளம் கலைஞர்களின் தனித்துவமான படைப்பில் உருவாகும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ஜோஷ்வா J பெரேஸ் (அறிமுகம்), இசையமைப்பாளராக கௌஷிக் ரவி (அறிமுகம்), படத்தொகுப்பாளராக ரமேஷ் வெங்கட் (அறிமுகம்) ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

“ஒரு எதார்த்தமான சந்திப்பில் பேசி முடிவெடுக்கப்பட்டது தான் இந்தப்படம். எங்கள் திரைப்படத்தில் பணியாற்றும் எல்லா கலைஞர்களின் மீதும் எனக்கு முழு நம்பிக்கை இருக்கின்றது. நிச்சயமாக இந்த படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கக்கூடிய திரைப்படமாக உருவெடுக்கும் என்பதை நான் நிச்சயமாக சொல்லுவேன். வருகின்ற டிசம்பர் மாதம் எங்கள் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாக இருக்கின்றது. 2018 ஆம் ஆண்டின் கோடை விருந்தாக எங்களின் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது திரைப்படம் இருக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் வி.சத்யமூர்த்தி.