full screen background image
Search
Thursday 21 November 2024
  • :
  • :
Latest Update

தேடிச் சென்று தம்பதிகளை வாழ்த்திய ஓபிஎஸ்

தமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் அண்மையில் திருமணம் செய்து கொண்ட கவியரசு கண்ணதாசனின் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசனின் இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

கவியரசு கண்ணதாசனின் பேரனும், கலைவாணன் கண்ணதாசனின் மகனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசனுக்கும், வினோதினி என்பவரும் கடந்த வாரம் சென்னையில் திருமணம் நடைபெற்றது. அதற்கு முன் திருமண வரவேற்பும் நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் எஸ் தாணு, இயக்குநர் கே பாக்யராஜ் உள்ளிட்ட தமிழ் திரைப்படத்துறையைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அத்துடன் தொல் திருமாவளவன், ஜி கே வாசன், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியைச் சேர்ந்த முன்னணி தலைவர்களும் கலந்து கொண்டு தங்களின் ஆசிகளை மணமக்களுக்கு வழங்கினர். திமுகவின் செயல் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் கன்னியாகுமரிக்கு பயணம் மேற்கொண்டதால் அவர் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள், ஆதவ் கண்ணதாசனின் இல்லத்திற்கு சென்று தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து ஆதவ் கண்ணதாசன் பேசும் போது,‘ என்னுடைய திருமணத்திற்கு வந்திருந்து வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. இவர்கள் அனைவரும் இன்று வரை கவியரசு கண்ணதாசன் ஐயா மீது வைத்திருக்கும் மரியாதையை நினைக்கும் போது உள்ளபடியே ஆனந்த கண்ணீர் கண்ணில் உகுக்கிறது. மரியாதைக்குரிய ஓ பி எஸ் அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இல்லத்திற்கு வருகிறேன் என்று சொன்னபோது, எனக்கு வியப்பு ஏற்பட்டது.

சொன்ன நேரத்திற்குள் வந்த ஓ பி எஸ் அவர்கள், ஐயாவைப் பற்றியும், ஐயாவின் பாடல்களைப் பற்றியும் இருபத்தைந்து நிமிடத்திற்கும் மேலாக ஆர்வமுடம் பேசியது எனக்கு சந்தோஷத்தை அளித்தது. மறைந்த முதல்வர் அம்மா அவர்கள் கண்ணதாசனின் சிலையை திறந்து வைத்த போது, தினமும் ஒரு மாலை அந்த சிலைக்கு அணிவிக்கப்படவேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்ததையும், இன்று வரை அவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதையும் அறிந்த போது, ஐயா அவர்கள் கட்சி பேதமின்றி அனைத்து கட்சியிலும் தனக்கான ஆதரவை உருவாக்கியிருந்ததை எண்ணி எண்ணி பிரமித்தேன்.

அவர்களின் உழைப்பு, கவிதை மீதான பற்றிற்கு இன்று வரை அவரது வாரிசுகளான எங்களுக்கு கிடைத்து வரும் கௌவரம் மெய்சிலிர்க்க வைக்கிறது. இதையெல்லாம் காண என்னுடைய தந்தை கலைவாணன் கண்ணதாசன் அவர்கள் இல்லையே என்ற ஏக்கமும் என்னுள் எட்டிப்பார்க்கிறது. இருந்தாலும் அனைவரும் வந்திருந்து வாழ்த்தியதற்கு இரு கரம் கூப்பி, சிரம் தாழ்ந்த வணக்கங்களை நன்றியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என்றார்.