அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா கட்சி ஆலோசனைக் கூட்டம் சென்னையில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி விரிவாக பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், நத்தம் விசுவநாதன், செம்மலை, கே.பி.முனுசாமி, பாண்டியராஜன், ஜெயபால், சண்முகநாதன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், பி.ஆர்.சுந்தரம் எம்.பி. உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு பன்னீர்செல்வம் அணி சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் தேதியை தெரிவிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்த நிலையில் பன்னீர்செல்வத்தின் அறிவிப்பு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.