நாயகன் விதார்த்துக்கு திருமணம் நடந்தால் குலதெய்வம் கோவிலில் கிடாய் வெட்டி சாமி கும்பிடுவதாக அவரது அம்மா வேண்டிக் கொள்கிறார். இந்நிலையில், விதார்த்துக்கும் ரவீணாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது. இதனால், தனது வேண்டுதலை நிறைவேற்ற சொந்த பந்தங்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு குலதெய்வம் கோவிலுக்கு லாரியில் செல்கிறார்கள்.
அந்த லாரியை விதார்த்தே ஓட்டி செல்கிறார். கோவிலை நெருங்கும் சமயத்தில் எதிரே வந்த மோட்டார் வண்டியில் லாரி மோதி விடுகிறது. இதில், மோட்டார் வண்டியில் வந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்துபோகிறார். இறந்த நபரை விபத்து நடந்த இடத்தின் பக்கத்திலேயே புதைத்துவிட்டு செல்கிறார்கள்.
அதன்பின்னர், நடந்த சம்பவத்தை தனது மாமாவான வழக்கறிஞர் ஜார்ஜிடம் விதார்த் கூற, அவருடைய அறிவுரையின்படி பிணத்தை தோண்டி பிரேத பரிசோதனை செய்கிறார்கள். அப்போது, இறந்தவர் விஷம் அருந்தி மோட்டார் ஓட்டி வந்தது தெரிய வருகிறது. ஆனால், இந்த உண்மையை விதார்த்திடம் கூறாமல் மறைக்கிறார் ஜார்ஜ்.
லாரி ஏற்றியதால்தான் அவர் உயிரிழந்ததாகவும், இதில் யாராவது ஒருவர் குற்றவாளியாக கோர்ட்டில் ஆஜராகவேண்டும் என்று கூறுகிறார். ஆனால், இந்த விஷயம் எப்படியோ போலீசுக்கு தெரியவர, லாரியில் சென்ற அனைவர் மீதும் வழக்கு பதியப்படுகிறது.
இறுதியில் இந்த பிரச்சினையில் இருந்து அனைவரும் மீண்டார்களா? ஜார்ஜ் ஏன் விதார்த்திடம் உண்மையை மறைத்தார்? அதன் பின்னணில் என்ன இருக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விதார்த் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். பாசம், பிரச்சனைகளை சமாளிப்பது என யதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். தனது வயது குறித்து கேலி செய்பவர்களிடம் சண்டை பிடிப்பது ரசிக்கும்படி இருக்கிறது.
முதல் படத்திலேயே நல்ல கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்திருக்கிறார் ரவீணா. அவரது நடிப்பும், முக பாவனைகளும் ரசிக்கும்படி இருக்கிறது. ரவீணாவுக்கு படத்தில் அதிகளவில் நடிப்பு இல்லாவிட்டாலும், தான் வரும் காட்சிக்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.
படத்தின் ஓட்டத்திற்கும், திருப்புமுனைக்கும் காரணமான ஜார்ஜ், வழக்கறிஞராக புதுமையான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். மற்றபடி ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் என அனைவருமே படத்தின் போக்குக்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.
ஒரு வித்தியாசமான கதையை ரசிக்கும்படி பொழுதுபோக்குடன் இயக்கியிருக்கிறார் சுரேஷ் சங்கையா. வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம். படத்தின் நாயகனே வசனங்கள் என்று கூறுமளவுக்கு, அந்த பகுதி மக்களின் பேச்சுக்கு ஏற்றபடி வசனங்கள் செதுக்கப்பட்டிருப்பது சிறப்பு. ஜார்ஜின் கதாபாத்திரத்தை முழுமையாக்காதது படத்தில் ஒரு குறையாக கூறலாம். மற்றபடி அன்பு, பாசம், வளர்ப்பு பிராணிகள் மீது குழந்தைகள் வைத்திருக்கும் அன்பு என சிறுசிறு காட்சிகள் கூட ரசிக்கும்படி இருக்கிறது.
ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவில் கிராமத்தின் பின்னணி அழகாக காட்டப்பட்டிருக்கிறது. ஆர்.ரகுராமின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது.
சினிமாவின் பார்வையில் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ பரிசீலனை.