தனியார் தமிழ் தொலைக்காட்சி சார்பில் பிரபலமான நபர்கள் 100 நாட்கள் ஒரே வீட்டில் ஒன்றாக இருக்கும் ‘பிக்பாஸ்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில், பங்கேற்பாளர்களில் ஒருவராக நடிகை ஓவியா கலந்து கொண்டிருந்தார். மனதில் பட்டதை யாருக்கும் பயப்படாமல் வெளிப்படுத்தும் அவரின் இயல்பான குணமும், குறும்புத் தனமும் ஏராளமான பார்வையாளர்களைக் கவர்ந்திழுத்தது.
இந்நிலையில் ஆரவ் உடன் ஏற்பட்ட காதல் விவகாரத்தால், தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர முடியாத அளவுக்கு மனஅழுத்தத்தில் இருந்த நடிகை ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி சொந்த ஊரான கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றுவிட்டார்.
அதற்கு பிறகு அவர் மனநல சிகிச்சை பெறுகிறார் என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இனி திரைப்படங்களில் நடிப்பாரா? மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? என்றும் பலவிதமான கேள்விகளும் எழுந்தது.
இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக, கொச்சியில் உள்ள தனது இல்லத்திலிருந்து வீடியோ மூலமாக ஓவியா விளக்கங்களை அளித்துள்ளார்.
அதில் அவர், “என்னைப்பற்றி வெளியான அனைத்து தகவல்களுக்கும் இந்த வீடியோ மூலமாக பதிலளிக்க விரும்புகிறேன்.
ரொம்ப கஷ்டமான விஷயம் இப்போது நடந்துகொண்டு இருக்கிறது. ஜூலி மற்றும் சக்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டனர். அந்த நிகழ்ச்சியில் என்னை மற்றவர்கள் ஒதுக்கிய போது நான் எப்படி மனதளவில் பாதிக்கப்பட்டேனோ, அதேபோல ஒரு நிலை தற்போது அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, தயவுசெய்து அவர்கள் மீது மோசமான கருத்துக்களை முன்வைக்காதீர்கள். அது என்னுடைய மனதுக்கு கஷ்டமாக உள்ளது.
தவறு எல்லோரும் தான் செய்கிறோம். யாரும் இங்கு சரியாக இல்லை, நான் உள்பட. தவறு செய்தால் தான் மனிதர்கள், இல்லையெனில் அவர்கள் விலங்குகளுக்கு சமம். கொலை, கற்பழிப்பு குற்றவாளிகளைக் கூட அரசாங்கமே மன்னித்து விடுகிறது. எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்தவை எல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை. அவர்களைத் தொல்லை செய்யாதீர்கள். நீங்கள் என் மீது வைத்துள்ள அன்பு எனக்கு புரிகிறது. ஆனால், மற்றவர்களைக் கஷ்டப்படுத்தி என்னிடம் அன்பு காட்ட வேண்டாம். அப்படிபட்ட ரசிகர்கள் எனக்குத் தேவையில்லை.” என்றார்.
மேலும், “நான் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பில்லை. நல்ல கதை அம்சமுள்ள திரைப்படங்களில் கவனம் செலுத்தப்போகிறேன்.
இனி என்னை திரைப்படங்களில் நீங்கள் பார்க்கலாம். நான் நடித்துள்ளேன் என்பதற்காக படங்களை ஆதரிக்க வேண்டாம். படம் நன்றாக இருந்தால் பாருங்கள். இல்லையெனில் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அப்படி விமர்சனம் செய்யுங்கள். கண்டிப்பாக படங்கள் நடிப்பதுதான் என்னுடைய திட்டம்.
ஆரவ் உடனான காதல் குறித்து அதிகமானோர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். நான் கடும் மன அழுத்தத்தில் உள்ளதாகவும், நான் என்ன நிலைமையில் உள்ளேன்? என நிறைய பேர் கேட்கின்றனர்.
நான் நலமாகவே உள்ளேன். எனக்கு எந்த மன அழுத்தமும் இல்லை. தற்போது, என்னுடைய மன அமைதிக்காக வீட்டில் ஓய்வில் இருக்கிறேன். ஆரவ் உடனான உண்மையான காதல் என்றும் தோற்காது. நீங்கள் என்னை பைத்தியம் என்று நினைக்கலாம். எனக்கு என்னுடைய காதலில் நம்பிக்கை உள்ளது. என்னுள்ளே இன்னும் காதல் இருக்கிறது.
யாரும் என்னை நம்ப வேண்டாம். காதலை நம்புங்கள். ஒருவரைக் காதலித்துவிட்டு பின்னர் அவரை வெறுக்க வேண்டும் என்றால் அது என்னால் முடியாது. என்னுடைய காதலில் நம்பிக்கை இருக்கிறது. நான் அதை கண்டிப்பாக திரும்பப்பெறுவேன்.
எனக்கு இவ்வளவு ரசிகர்கள் அன்பாகவும், ஆதரவாக இருப்பீர்கள் என நினைத்து பார்க்கவே இல்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. லவ் யூ கய்ஸ். எனது ஹேர் ஸ்டைல் குறித்து பல தகவல்கள் வருகின்றன. சிகிச்சைக்காக எனது தலைமுடி வெட்டப்படவில்லை.
உண்மை என்னவென்றால் விக் தயாரிக்கும் நிறுவனம் என்னை அணுகியது. கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது முடிகள் போய்விடும். இதனால், அவர்களுக்கு விக் தேவைப்படுகிறது. அந்த விக் தயாரிப்பதற்காகவே எனது தலைமுடியை தானமாக வழங்கினேன். உங்களுக்கு இந்த ஹேர் ஸ்டைல் பிடிக்கும் என நம்புகிறேன். முடி வெட்டியதற்கு வேறு எந்த காரணமும் இல்லை.
என்னை பல ரசிகர்கள் ரோல் மாடலாக எடுத்துக்கொள்வதாக தெரியவந்தது. அது மிகவும் தவறு. யாரும் இங்கு சரியானவராக இல்லை, நான் உள்பட. ஒவ்வொருவருக்கும் பாஸிட்டிவ், நெகட்டிவ் பக்கங்கள் உண்டு. மற்றொருவரை அப்படியே நகலாக நீங்கள் எடுத்துக் கொண்டால் அது உங்களது சுய மரியாதையை பாதிக்கும். ஒருவரிடம் பிடித்த விஷயங்களை நீங்கள் பின்பற்றலாம். ஆனால், மொத்தமாக ரோல்மாடலாக எடுத்துக்கொள்வது வேண்டாம்
உங்களுக்கென ஒரு ஸ்டைலை உருவாக்குங்கள். மகிழ்ச்சியாக இருங்கள்.” என்று பேசியுள்ளார்.