கமலுக்கு ஆதரவு தெரிவித்த ஓவியா

News

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியா பங்கேற்றார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், “இன்றைய சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்ய விரும்புகிறேன். அதற்கு என்னை முதலில் தயார் செய்து கொள்கிறேன். நல்லது செய்ய வேண்டும் என்பது என் ஆத்ம திருப்திக்காக தான். மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ என்று நான் கவலைப்பட்டதில்லை.

அரசியல் என்பது காமெடியான வி‌ஷயம் அல்ல. அது ஒரு சேவை. சேவை செய்ய அரசியல் மிகப்பெரிய அடித்தளம். தற்போது பலர் புகழ் மற்றும் பணத்திற்காக அரசியலைத் தவறாக பயன்படுத்துகின்றனர்.

கமல்ஹாசன் எனக்கு பிடித்தவர் மட்டுமின்றி மனிதாபிமானவர். அவர் அரசியலுக்கு வரவேண்டும். ஏற்கனவே அவரிடம் புகழ், பணம் உள்ளதால் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்வார் என நம்புகிறேன்.

அரசியலுக்கு அவர் வந்தால் நான் ஆதரிப்பேன். இதுவரை சினிமாவில் நடித்த அவர் இனிமேல் அரசியலுக்கு வர நினைத்திருக்கலாம். அதனால் தான் அவர் அரசியல் சார்ந்த கருத்துக்களைத் தெரிவிக்கிறார்.

கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் என்னுடைய ஆதரவு அவருக்கு தான். அவர் அரசியலுக்கு வர உள்ளதால் சினிமாவுக்கு ஓய்வு கொடுக்க மாட்டார் என நினைக்கிறேன். ஏனென்றால் சினிமாவில் கலைஞனுக்கு எப்போதுமே ஓய்வு கிடையாது.

நடிகர் ரஜினியை தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால் கமல் பற்றி தெரியும். எனக்கு அரசியல் எதுவும் தெரியாது. நான் இப்போது அரசியலுக்கு வர மாட்டேன். சிறந்த படங்களில் நடிக்கவே நான் முழு கவனம் செலுத்தி வருகிறேன். தற்போது நான் ‘காஞ்சனா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளேன். நான் இதுவரை யாரையும் போட்டியாக நினைத்தது இல்லை.

என்னை மகிழ்வித்த மக்களுக்கு கண்டிப்பாக நல்லது செய்வேன்.” என்று கூறினார்.