பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் வரும் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. குஜராத்தில் ஆளும் பாஜகவும் எதிர்க்கட்சியான காங்கிரஸும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. நேற்று, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
குஜராத்தில் ஜஸ்தான் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில், ‘‘டீ விற்ற ஒருவர் நாட்டின் பிரதமர் ஆனதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான் டீ விற்க தயாராக இருக்கிறேன், ஆனால் நாட்டை ஒருபோதும் விற்கமாட்டேன்’’ என்று பிரதமர் பேசியிருந்தார். இந்த நிலையில், பிரதமர் மோடியின் பேச்சை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ குஜராத் தேர்தல் என்பது மிஸ்டர் மோடிக்காக நடப்பது அல்ல; தனிப்பட்ட ஒருவருக்காக இல்லை. பிரதமர் மோடி தன்னைப்பற்றியே பிரச்சாரம் செய்கிறார். தான் பிரதமர் என்பதை மோடி மறந்துவிட்டாரா? வேலை வாய்ப்பின்மை, போதிய முதலீடு இல்லாமை, விலை உயர்வு, ஏற்றுமதி தேக்கம், சிறுதொழில்கள் நலிவடைவு ஆகியவை பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை?:” இவ்வாறு அவர் தெரிவித்தார்.