full screen background image
Search
Thursday 21 November 2024
  • :
  • :
Latest Update

சென்னையில் “உலக இசைகளின் சங்கமம்” – தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் பண்பாட்டு மையம்” மற்றும் “மெடராஸ் ரெக்கார்ட்ஸ்” இணைந்து ஒருங்கிணைத்திருக்கும்                                                  “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்” இசை நிகழ்ச்சி
சென்னையில் 06-01-2018 அன்று நடைபெற இருக்கிறது. முன்னதாக, “கானா-ராப்-ராக்” மூன்று வடிவங்களையும் கலந்து நடைபெற இருக்கும் இந்நிகழ்ச்சியில் பங்குபெரும் இசைக்குழு மற்றும் இசைக்கலைஞர்களின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் இயக்குநர் பா.இரஞ்சித் கலந்துகொண்டு கலைஞர்களை பத்திரிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இசைக்கலைஞர்களை அறிமுகம் செய்து வைத்து பா.இரஞ்சித் பேசியதாவது,

“நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்திருக்கிற அடுத்த முயற்சி தான் இந்த “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்” இசை நிகழ்ச்சி.
இதில் பங்குபெற்றிருக்கும் கலைஞர்கள் எல்லோருமே அவரவர் பகுதிகளில் மிக பிரபலமானவர்கள். இவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்து, மக்களின் இசையாகிய கானாவை
உலகம் முழுவதும் பரப்புகிற முயற்சியில் இறங்கியுள்ளோம்.மக்களுக்கான அரசியல் பேசவும், மக்களின் பிரச்சனைகளைப் பேசவும் கலையை பயன்படுத்த வேண்டும்.

சாதி, மதமற்ற இணக்கத்தை கலையின் எல்லா வடிவத்திலும் கொண்டுவர வேண்டும். இந்த சமூகம் சாதியால் பிரிந்து கிடப்பது                              போலவே கலையும் இங்கு பிரித்து வைக்கப்பட்டுள்ளது.
அப்படி தமிழகத்தின் எல்லா கலைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்கான தேவை இங்கு இருக்கிறது. அயோத்திதாச பண்டிதர்  கூறியது போல சாதியற்ற தமிழர்களாக இணைவது முக்கியம். அதற்கு இந்த இசை வடிவம் தொடக்கமாக இருக்கும்.

கானா என்பது மக்களின் இசை, மூடப் பழக்கவழக்கங்களை எதிர்க்கிற இசை. அது போல தான் ராப் இசையும். அது கறுப்பர்களின் வாழ்வியலையும், அவர்களின் போராட்டங்களையும் உலகிற்கு எடுத்துச் சொன்னது.
அதனடிப்படையில் பார்த்தால் ராப் இசையும், கானாவும் வேறு வேறில்லை. இரண்டுமே மக்களின் வலியை, துயரத்தை பேசக் கூடியவை. இரண்டையுமே இணைத்து இந்த “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்” இசை நிகழ்ச்சி அரங்கேற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 20 பாடல்கள் பாடப்பட இருக்கிறது. எல்லா விதமான உணர்வுகளோடும் கூடிய பாடல்களாக அவை இருக்கும். இந்நிகழ்ச்சி, தொல்குடி மக்களின் இசையை
உலகிற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாகும். இன்னும் தமிழகத்தின் மூலைகளில் பரவிக் கிடக்கிற எளிய மக்களின் அத்தனை இசை வடிவங்களையும் ஒருங்கிணைக்கும் யோசனையும் இருக்கிறது” என்று பேசினார்.

இந்நிகழ்ச்சி கீழ்ப்பாக்கத்தில் உள்ள சி.எஸ்.ஐ பேயின்ஸ் பள்ளியில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. மிகப்பெரிய திறந்தவெளி அரங்க இசை நிகழ்ச்சியாக நடைபெறும் இந்த நிகழ்விற்கு கட்டணம் ஏதும் இல்லை. அனைவருக்கும் அனுமதி இலவசம்.