இயக்குநர் பா.இரஞ்சித் சினிமா இயக்குநராக மட்டுமல்லாமல் அம்பேத்கரிய சிந்தனையாளராகவும், தீவிர செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார். இந்த சமூகம் தாங்கி நிற்கிற சாதிய அடையாளங்களை உடைத்தெறிந்து, மனித மாண்பினை மீட்டெடுக்கிற கொள்கையினைக் கையிலெடுத்துக் கொண்டு களமாடி வருகிறார்.
இன்றைய சமூகத்தின் அரசியல் சிக்கல்களை தெளிந்த பார்வையுடன் அணுகும் வெகுசில கலைஞர்களில் பா.ரஞ்சித் மிகவும் முக்கியமானவர், தவிர்க்க முடியாதவர். தனது படைப்புகளின் ஒவ்வொரு அணுவிலும் தனது கருத்தியலை நிரப்பி, சினிமாவை ஒரு பிரச்சார ஊடகமாக சரியாக பயன்படுத்தும் நம்பிக்கைக்குரிய இயக்குநர்.
அவர் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் “காலா” திரைப்படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், தூத்துக்குடியில் ரஜினி பேசிய பேச்சிற்கு அரசியல் அரங்கில் பெரும் கொந்தளிப்பை ஏர்படுத்தி இருக்கிறது.
“எப்படி ரஜினி எல்லோரையும் பொத்தாம் பொதுவாக சமூக விரோதிகள் என்க் கூறலாம்?” என சிலரும், “போராடினால் தமிழகம் சுடுகாடாக மாறும் என்பதே தவறு, தமிழகம் சுடுகாடாக மாறிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த போராட்டங்கள் எல்லாம் நடக்கின்றன” என சிலரும் ரஜினிக்கு எதிராக கண்டனக் குரலை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், சிவகங்கை கச்சநத்தம் பகுதியில் தலித் குடியிருப்பின் மீது நடத்தப்பட்ட சாதீய வன்கொடுமை தாக்குதலால் மரணமடைந்தவர்களுக்கு நீதி கேட்டு நடந்து வரும் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் இயக்குநர் பா.இரஞ்சித்திடம், ரஜினியின் இந்த பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அதற்கு பதிலளித்த அவர்,
“அது அவருடைய கருத்து. காலையில் தான் நான் ரஜினி சாரிடம் பேசினேன். அவர் போராட்டமே கூடாது என்று சொல்லவில்லை, மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் அப்படிக் கூறியதாக சொன்னார். என்னைப் பொருத்தவரையில் போராடாமல் எதையும் பெற முடியாது. இப்போது கூட நான் போராட்டத்தில் தான் இருக்கிறேன்” என்று கூறினார்.