இயக்குனர் பா.இரஞ்சித், தனது அனைத்து படங்களிலும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியலையும், அவர்களுக்கான அரசியலையும் வலுவாக பேசக்கூடியவர். திரைப்படங்களில் கருத்துக்களைப் பேசுவதோடு நின்று விடாமல் களத்திலும் சமூக மாற்றத்திற்கான அவசியத்தை முன்னிறுத்தி பல ஒருங்கிணைப்புகளையும், சாதி ஒழிப்பிற்கான பல விவாதங்களையும் நடத்திக் கொண்டிருப்பவர். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து “காலா” படத்தை எடுத்து வந்தாலும், இடையிடையே சமூகம் சார்ந்த தனது செயல்பாடுகளையும் தொய்வில்லாமல் தொடர்ந்தவண்ணம் உள்ளார்.
அந்த வகையில், தனது சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம் புரொடக்சன்ஸ்” மற்றும் “நீலம் பண்பாட்டு மையம்” ஆகியவை இணைந்து ஒருங்கிணைத்துள்ள “நானும் ஒரு குழந்தை” என்னும் தலைப்பில் புகைப்பட கண்காட்சி ஒன்றை நடத்த உள்ளார் பா.இரஞ்சித்.
புகைப்படக் கலைஞர் ம.பழனிகுமாரின் புகைப்பட பிரதிகள் இடம்பெறும் இந்த கண்காட்சி, “சாதியை ஒழிப்போம்.. சமூக மாற்றத்திற்கான மனித மாண்பை மீட்டெடுப்போம்” என்கிற முழக்கத்தோடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
வருகிற நவம்பர் 8ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள “லலித் கலா அகாடமி” அரங்கில் தொடங்கும் இந்த கண்காட்சி தொடர்ந்து நவம்பர் 9ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தொடர்ந்து ஆறு நாட்கள் காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை கண்காட்சி நடைபெறும் என்று பா.இரஞ்சித் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.