full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

வித்தக கவிஞரின் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லர்

வில் மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரித்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் பிரம்மாண்டமாக வெளியிடும் திரைப்படம் தான் ‘ஆருத்ரா’. இதில் நடிகர் பா. விஜய், கே பாக்யராஜ், மொட்டை ராஜேந்திரன், மும்பையை சேர்ந்த மாடலிங் மங்கை தக்ஷிதா, கொல்கத்தாவைச் சேர்ந்த மேகாலீ, ஹைதராபாத்தைச் சேர்ந்த சோனி ஆகிய மூன்று பேர் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் நடிகர் விக்னேஷ், ஒய் ஜி மகேந்திரன், மயில்சாமி, அபிசேக், கண்ணன், பேராசிரியர் ஞானசம்பந்தம், இயக்குநர் ஏஸ் ஏ சந்திரசேகர், மீரா கிருஷ்ணா, சஞ்சனா சிங், பேபி யுவா, ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

படத்திற்கு ‘இளைஞன்’ படப்புகழ் பி எல் சஞ்சய் ஒளிப்பதிவு செய்ய, ‘மெலோடி கிங் ’ வித்யாசாகர் இசையமைக்கிறார். ‘ஸ்ட்ராபெர்ரி’ படப்புகழ் ஷான் லோகேஷ் எடிட்டிங் மேற்கொள்ள, சண்டை பயிற்சியை கணேஷ் கவனிக்கிறார். படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ‘வித்தக கவிஞர் ’ பா விஜய்.

படத்தைப் பற்றி அவர் பேசும் போது,‘ ஸ்ட்ரா பெர்ரி படத்தைத் தொடர்ந்து என்னுடைய இயக்கத்தில் உருவாகியிருக்கும் இரண்டாவது படம் ‘ஆருத்ரா’. இந்த படத்தில் என்னுடைய தந்தையாக வித்தியாசமான தோற்றத்தில் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் நடித்திருக்கிறார். நான் சிவமலை என்ற கேரக்டரில் தொன்மையான பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியராக நடித்திருக்கிறேன். ‘ஆருத்ரா ’ ஒரு எமோஷனல் வித் க்ரைம் திரில்லர் ஜேனரில் உருவாகியிருக்கிறது. இதில் இயக்குநர் கே பாக்யராஜும், மொட்டை ராஜேந்திரனும் துப்பறியும் நிபுணர்களாக சுவராசியமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். ‘ஸ்ட்ராபெர்ரி ’யில் எப்படி ஒரு சமூக கருத்தை அழுத்தமாக பதிவு செய்தேனோ, அதே போல் இந்த ‘ஆருத்ரா’விலும் சமூகக்கருத்து ஒன்றை அக்கறையுடன் மையப்படுத்தியிருக்கிறேன்.

இரண்டு மூன்று சம்பவங்களை பார்த்து, கேட்டு, படித்த பின் தான் இந்தப்படத்தின் திரைக்கதையை எழுத தொடங்கினேன். எழுதி முடித்தபின் இந்த திரைப்படத்தை நானே இயக்க திட்டமிட்டேன். சென்னை, பாண்டிசேரி, ஜெய்ப்பூர், ராஜஸ்தான், ஹரித்துவார், குலு, மணாலி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. மொத்தம் எண்பத்தைந்து நாள்கள் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. படத்தில் நாற்பது நிமிடத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறவிருப்பதால் அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

ஆருத்ரா என்பது ஒரு கதாப்பாத்திரத்தின் பெயர். இந்த படத்தில் மூன்று நாயகிகள் இருந்தாலும் காதல் காட்சிகள் என்று தனியாக எந்த காட்சிகளும் இல்லை. இந்த படத்தில் கே பாக்யராஜும், மொட்டை ராஜேந்திரனும் துப்புறிவாளர்களாக திரையில் தோன்றி, ரசிகர்களை அதகளப்படுத்துவார்கள். இந்த படம் அனைத்து பெற்றோர்களும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு செய்தியை கொண்டிருக்கிறது. இந்த படத்தின் கதையை பெற்றோர்கள் உணர்ந்தால், அவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு எப்படியெல்லாம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்வார்கள். சிறிது இடைவெளிக்கு பின் இந்த படத்தின் மூலம் நடிகர் விக்னேஷ் மீண்டும் திரையுலகில் மறுபிரவேசம் செய்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியிட்டோம். இதற்கு பெரும் ஆதரவும் வரவேற்பும் கிடைத்து வருகிறது. அதனைத் தொடர்ந்து ஆடியோ மற்றும் டிரைலர் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். பொங்கலுக்கு பிறகு திரையிட திட்டமிட்டு வருகிறோம். இப்படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் பிரம்மாண்டமாக வெளியிடுகிறார்கள்.’ என்றார்.