full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இப்ப சினிமா ரொம்ப கஷ்டத்துல இருக்கு படைப்பாளன் இசை வெளியீட்டு விழாவில் எஸ்.திருநாவுக்கரசர் பேச்சு

 

இப்ப சினிமா ரொம்ப கஷ்டத்துல இருக்கு பெரிய நடிகர்கள் பெரிய இயக்குநர்கள் எல்லாம் சம்பளத்தை குறைக்க வேண்டும் படைப்பாளன் இசை வெளியீட்டு விழாவில் எஸ்.திருநாவுக்கரசர் பேச்சு

LS.தியன் பிக்சர்ஸ் S.நட்சத்திரம் செபஸ்தியான்  பெருமையுடன் வழங்கும் படம் படைப்பாளன். இப்படத்தை LS.பிரபுராஜா எழுதி இயக்கியிருக்கிறார். கதைத்திருட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா  சென்னை பிரசாத்லேப்-ல் நேற்று நடைபெற்றது.

விழாவில்,

“கலைப்புலி எஸ் தாணு பேசியதாவது,

“இந்தப்படத்தின் இயக்குநர் பிரபுராஜா சினிமாவிற்கு முயற்சி செய்தபோதெல்லாம் நான் கோபப்பட்டிருக்கேன். ஏன் நீ இந்த துறைக்கு வருகிறாய்  என்று சத்தம் போட்டிருக்கேன். ஆனால் இன்று தம்பியைப் பார்த்து வெட்கித் தலைகுனிகிறேன். படத்தை தம்பி அவ்வளவு சிறப்பாக எடுத்திருக்கிறார். அவருக்கு சினிமாவில் பெரிய இடம் கிடைக்க வாழ்த்துகள்” என்றார்

 இசை அமைப்பாளர் கிருபாகரன் பேசியதாவது,

“நான் வேலை விட்டுட்டு சினிமாவிற்கு வந்தவன். இந்தப் பீல்டில் பத்து வருடமாக இருக்கிறேன். கன்னடத்தில் நான்கு படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும் தமிழில் சரியான படம் வரலியே என்று ஏங்கினேன். அதற்கான பலன் இப்போது கிடைத்திருக்கிறது. இந்தப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை இருக்கிறது. இரண்டு வாரம் உழைத்து உருவாக்கிய ஒரு பாடலை சரியில்லை என்பதற்காக தூக்கிப் போட்டோம். இதுவரை நான் பாடல் வரிகளை ட்யூன் போட்டதில்லை..முதன்முதலாக இந்தப்படத்தில் தான் வரிகளுக்கு இசை அமைத்தேன். தமிழ் வரிகளுக்குள் ஒரு இசை இருக்கும் என்பதை இப்போது தான் உணர்ந்தேன்” என்றார்

 இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது,

“வள்ளல் தன்மைக்கு கடவுள் தந்த மனித உருவம் தான் எம்.ஜி.ஆர். அந்த எம்.ஜி.ஆருக்கு மகன் போல இருந்தவர் திருநாவுக்கரசர். அவர் ஒரு படத்தின் கதாநாயகனும் கூட. அவரை இந்த மேடையில் சந்தித்தது சந்தோஷம். இந்தப்படத்தின் ட்ரைலரில் ஒளிப்பதிவு எனக்கு மிகவும் பிடித்தது..அது படத்தின் தரத்தை கூட்டி இருக்கிறது. இந்தப் படைப்பாளன் படம் கதைத்திருட்டு சம்பந்தப்பட்ட கதை.  ஒருமுறை தேனி கண்ணன் நான் ஒரு கதை சொல்றேன் படம் எடுக்கிறீங்களா என்று கேட்டார்..நான் அந்தக்கதையைப் பதிவு செய்துவிட்டு வா தம்பி என்றேன். ஏன் என்றால் கதை என்பது ஒருவனின் அறிவு. அதனால் அதை பாதுகாப்பாக வைக்க வேண்டியது நமது கடமை. இடம் பொருள் ஏவல் என்று ஒரு படம் எடுத்தேன். அக்கதையை எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னார். அந்தக்கதைக்கு நான் தயாரிப்பாளரிடம் அழைத்துச் சென்று பத்துலட்சம் ரூபாய் வாங்கிக்கொடுத்தேன். ஏன் என்றால் கதை என்பது அவ்வளவு முக்கியம். இந்த வாழ்வை மிக மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்பவன் தான் படைப்பாளி. இந்தப் படைப்பாளன் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்” என்றார்

பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது,

 “இந்த மேடையை நான் மிக நெகிழ்வாகப் பார்க்கிறேன். அண்ணன் திருநாவுக்கரசர் உடன் மேடையில் தஞ்சையில் அமர்ந்த நிகழ்வு ஞாபகம் வருகிறது. அந்த வகையில் படைப்பாளன் படக்குழுவிற்கு நன்றி. உதவி இயக்குநர்கள் பற்றி ஒரு பாடல் கேட்டார்கள். இங்கு வியாபாரத் தனமான பாடல்களுக்குத் தான் வரவேற்பு கிடைக்கிறது. இங்கு மனதறிந்து பாராட்டும் குணம் யாருக்கும் இல்லை. உதவி இயக்குநர்களின் வாழ்க்கையை நான் நிறைய பார்த்திருக்கிறேன். அவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு வந்தபின் மற்றவர்களை கண்டுகொள்வதில்லை. அண்ணன் சீனுராமசாமி உதவி இயக்குநர்களின் வலிகளை சொல்லும் பாடலை இவ்வளவு சோகமாக சொல்ல வேண்டாம் என்றார். ஆனால் இங்கு கண்ணீரையும் சில சமயம் பதிவு செய்யவேண்டிய இருக்கிறது. உதவி இயக்குநர்களின் கண்ணீர் உண்மையானது. அதை இந்தப்படைப்பாளன் படம் செய்திருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்

 நடிகர் மனோபாலா பேசியதாவது,

“சிநேகன் சார் பேசும்போது இப்படத்தின் கதை தெரியாது என்றார்.  நான் படத்தில் நடித்திருக்கிறேன். எனக்கும் தான்  கதை தெரியாது. இந்த இயக்குநருக்காவது தெரியுமான்னு தெரியல. இப்பலாம் வாயில் இருந்தே கதையை திருடுகிறார்கள். இந்த தீபாவளிக்கு மட்டும் எத்தனை கேஸ் வரபோகுதுன்னு பாருங்க. ஏன்னா நிறைய பேர் தீபாவளிக்கு கோர்ட்ல தான் நிப்பாங்க. இந்த படைப்பாளன் வெற்றிபெறுவான் என்றார்”

ஜாக்குவார் தங்கம் பேசியதாவது,

“இங்கு டைட்டில் பிரச்சனைக்கே பெரிய பஞ்சாயத்து நடக்கிறது. இந்தப் படைப்பாளன் படத்தில் ஒருபாடல் மனதை ரொம்ப கனக்கச் செய்தது. பைப்பில் தண்ணீர் குடித்துவிட்டு வாழ்க்கையை ஓட்டிய உதவி இயக்குநர்கள் நிறைய உண்டு. நடிகர்கள் எல்லாம் இப்போ தினசரி சம்பளம் வாங்குகிறார்கள். இவங்கல்லாம் ஜனாதிபதியை விட அதிகமாக சம்பளம் வாங்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கம் இதற்கு ஒரு முடிவு எடுத்து நடிகர்கள் சம்பளத்தை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். அப்படி நடிகர்கள் ஒத்து வராவிட்டால் வேறு நடிகரை வைத்து எடுங்கள். இங்கு என்ன எல்லா நடிகர்களும் வானத்தில் இருந்தா வந்தார்கள்?. இங்கு தமிழர்களுக்கு மட்டும் வேலை கொடுங்கள். இந்தப்படத்தில் கேமரா, எடிட்டிங், இசை எல்லாமே நன்றாக இருக்கிறது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்” என்றார்

இயக்குநர் பிரபுராஜா பேசியதாவது,.

 “இந்தப்படத்தைப் பற்றி நிறைய பேர் பேசி இருக்கிறார்கள். இங்கு கதைத்திருட்டு இல்லை என்று சில ஜாம்பவான்கள் சொல்கிறார்கள். அதெல்லாம் சும்மா. இந்தப்படத்தை தயாரிக்க ஆறுமுகம் என்பவர் முன்வந்தார். திடீரென அவர் கதைய ரெடி பண்ண நீங்கள் தான் பணம் கொண்டுவரவேண்டும் என்றார். ஆனால் அவர் இடையில் ஓடிவிட்டார். சில பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனி காரர்கள் யாருமே கதை கேட்க மாட்டார்கள். அங்குள்ள இடைத்தரகர்கள் கதை கேட்டு முடிவு செய்கிறார்கள். அதில் நிறைய திருட்டு நடக்கிறது. ஒரு பெரிய இயக்குநர் உதவி இயக்குநரின் கதையை எடுக்கும் போது அவங்களுக்கான அங்கீகாரத்தை கொடுக்கணும். இந்தப்படத்தில் பல உண்மைகளை சொல்லி இருக்கிறோம். யாரையும் காயப்படுத்தணும்னு இந்தப்படத்தை எடுக்கவில்லை. இந்தப்படம் வெற்றியடைய பத்திரிகையாளர்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்

எஸ்.திருநாவுக்கரசர் பேசியதாவது,

“ஒரு நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது நிறையபேர் மகிழ்ச்சியோடு வந்து அமர்வார்கள். நேரம் ஆனதும் எப்படா முடியும் என்று தோன்றும். எனக்கு சினிமாவில் சில அனுபவம் உண்டு. சில படங்களில் தயாரிக்க நடிக்க என்று இருந்தேன். திரைக்கதையும் எழுதியுமிருக்கிறேன். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சில நடிகர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். அவருக்கும் எனக்கும் பிரச்சனை என்பதால் யாரும் நடிக்க வரவில்லை. இந்தப்படத்தின் இயக்குநர் தம்பி பிரபுராஜா மிகவும் துடிப்பான இளைஞன். அவரை எனக்கு லயோலா காலேஜில் படிக்கும் போதே தெரியும். அவரை எப்போது பார்த்தாலும் ஊக்கப்படுத்துவேன். மிகவும் மன உறுதியோடு செயல்படக்கூடியவர். இந்தப்படத்தை முழுமையாக பிரபுராஜா முடித்து விட்டார் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு கதை தான் முதல் முக்கியம். கதை தான் ஹீரோ. நடிகர்கள் எல்லாம் இரண்டாவது தான். எம்.ஜி.ஆருக்கு கூட தோற்ற படங்கள் உண்டு. ஆக கதை தான் எப்பவும் முக்கியம். அதேபோல் அடுத்தடுத்த காட்சிகள் பெரிய சுவாரசியத்தை தர வேண்டும். பிரபுராஜா உதவி இயக்குநராக ரொம்ப கஷ்டப்பட்டவர். நிறையபேரிடம் கதைகளைச் சொல்லியும் இருக்கிறார். அதனால் அவரது அனுபவம் தான் இந்தப்படம். உண்மையிலே உதவி இயக்குநர்களின் வாழ்வு மிகவும் கடினமானது தான்.  பலபேர் உதவி இயக்குநர்களாகவே வாழ்க்கையை முடித்திருக்கிறார்கள். ஆனால் பிரபுராஜா மிகவும் சிரமப்பட்டு எடுத்திருக்கிறார். படத்தின் இசை சிறப்பாக இருக்கிறது. பாடல்களை கவிஞர்கள் நன்றாக எழுதி இருக்கிறார்கள். கேமராமேன் சூப்பரா பண்ணிருக்கார். கதையின் கருவும் ரொம்ப சிறப்பாக இருக்கு. அது கரண்ட்ல இருக்குற விசயம் என்பதால் நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும்.  சிலபேருக்குத் தான் கேமரா லுக் அமையும். பிரபுராஜாவுக்கு அது நல்லா அமைஞ்சிருக்கு. பெரிய பந்தா எதுவும் இல்லாமல் இயல்பா நடிச்சிருக்கார். ஆக எல்லா வகையிலும் படம் நல்லா வரும். இப்ப சினிமா ரொம்ப கஷ்டத்துல இருக்கு. ஏன் இந்தியாவே ரொம்ப கஷ்டத்துல தான் இருக்கு. சினிமா என்பதே பிரசவ வலி மாதிரி தான். பெரிய நடிகர்கள் பெரிய இயக்குநர்கள் எல்லாம் சம்பளத்தை குறைக்க வேண்டும். சம்பளங்களை குறைச்சா சினிமா இன்னும் சுகாதரமா இருக்கும். ஹெல்த்தியா இருக்கும். அதனால் இந்த விசயத்தை கல்சட் பண்ணலாம். சினிமா நிறையபேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கக் கூடிய தொழில் இது. மற்றபடி என் தம்பி பிரபுவால் எல்லாம் முடியும். உன்னால் முடியும் தம்பி” என்றார்.

நடிகர்கள்

LS.பிரபுராஜா நாயகனாக நடித்துள்ளார் மற்றும் மனோபாலா, இயக்குனர் தருண்கோபி, ஜாக்குவார் தங்கம், பாடகர் வேல்முருகன், காக்கா முட்டை ரமேஷ் – விக்கி, அஷ்மிதா, வளவன், திருச்சி வேலுச்சாமி.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு : வேல்முருகன்

இசை  : கிருபாகரன்

பாடல்கள் : கு.கார்த்திக்

கலை : ஸ்ரீமன் பாலாஜி

எடிட்டிங்  : எஸ்.பி.அகமது

மக்கள் தொடர்பு : மணவை புவன்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி,நாயகனாக நடித்துள்ளார்  –  L.S.பிரபுராஜா இவர் இயக்குனர் தருண்கோபியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.