full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

படைவீரன் – விமர்சனம் !

 

எல்லோரும் மூடி மறைக்க முயலும் ஒரு விஷயத்தை மிகத் துணிச்சலாக அப்பட்டமாக அப்படியே படம் பிடித்துக் காண்பித்திருக்கிறார் இயக்குநர் தனா. அந்த தைரியத்திற்கு முதலில் வாழ்த்துகள்.

“இப்ப எல்லாம் யாருங்க ஜாதி பார்க்குறாங்க” என்று மேம்போக்காய் பிரச்சினைகளை அணுகும் திரையுலகில், இப்படி ஜாதியையும் ஜாதி வெறியையும் மிக இயல்பாய் காட்டியிருப்பது நல்ல முன்னேற்றம். காரணம் மறைத்து மறைத்து ஒரு விசயத்தைப் பேசும்போது அவற்றை நேரடியாக விவாதத்திற்கு உட்படுத்த முடிவதில்லை. “படைவீரன்” போன்று ஜாதி வெறி கொண்டவர்களைப் பற்றி  துணிவுடன் பேசும் படங்கள் இன்னும் நிறைய வெளிவர வேண்டும் நம் தமிழ் சினிமாவில்.

எத்தனையோ ஆணவக்கொலைகளை செய்தித் தாள்களில் படித்ததோடு சரி. அதற்கு மேல் அதனைப் பற்றிய எந்த பாதிப்பும் நமக்கு இருந்ததில்லை. ஆனால் “படைவீரன்” திரைப்படத்தில் ஒரு ஊரே சேர்ந்து செய்யும் ஒரு ஆணவக் கொலை உங்களை ஒரு நிமிடம் உறைய வைக்கும். இப்படியும் மனிதர்கள் மிருகங்களாய் வாழ்கிறார்களே! என்று எண்ணி வியக்க வைக்கும். அதிலும் அந்த ஆணவக் கொலையை பெண்களைக் கொண்டே செய்யும் படி காட்சிப்படுத்தி இருப்பது மேலும் சிறப்பு.

படத்தில் குறிப்பிடும் படியான வசனங்கள் நிறைய இருந்தாலும் உங்களுக்காக சில,

“எழுதி வச்சிட்டு போய்ட்டாங்கன்னு எல்லாத்தயும் ஏத்துகிட்டு வாழ்ந்துகிட்ருக்கோம்”

“விவசாயம் பார்த்திட்ருந்தவனெல்லாம் படிச்சு மேலே போய்ட்டான்.. இன்னும் நீங்க எல்லாம் சாதிப் பெருமையே பேசிட்ருக்கீங்க”

“நெஞ்சுல வெட்டுனவனை அப்புறம் பார்த்துக்கலாம், முதுகுல குத்தினவனை என்ன செய்யலாம்னு யோசிங்க. மானமிருக்கவன் செய்ங்க, செலவை சங்கம் பார்த்துக்கும்”

“எவனையாவது வெட்டிட்ட குத்திட்டேன்னா ஊருல கேட்டு காசு வாங்கலாம்.. போலீசுல சேரணும்னா எவன்கிட்ட கேட்க?”

என படம் முழுக்க எந்த பூசலும் மொழுகலும் இல்லாமல் இயல்பான வசனங்கள்..

நாயகனாக விஜய் ஜேசுதாசிற்கு முதல் படம். மிகத் தைரியமான முடிவு, “படைவீரன்” கதையைத் தேர்ந்தெடுத்தது. ஆனால், வெறும் வசனம் மட்டுமே பேசுகிறார். முகத்தில் ஒரு உணர்வும் தென்படவில்லை. சில இடங்களில் நடிப்பதற்கு நிறைய முயற்சி செய்திருக்கிறார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவிற்கு எக்ஸ்.மிலிட்டரி மேன் கேரக்டர். முறைப்பும், விறைப்பும், குறும்பும், கணிவும் கொண்ட ஒரு முதியவராக பாரதிராஜா ஆங்காங்கே ஆறுதல் தருகிறார். அவர் பேசும் சில வசனங்கள் ஜாதி வெறியர்களுக்கு சில நேரம் இனிக்கும், சில நேரம் நிச்சயமாய் உறுத்தும்.

வழக்கம் போல பின்னணி இசையில் படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா. பாடல்கள் எல்லாம் கேட்கும் ரகம்.

கதாநாயகி அம்ருதா, வில்லனாக நடித்திருக்கும் கவிதா பாரதி என அனைவரும் நிறைவாகவே நடித்திருக்கிறார்கள். கீழ்ஜாதிக்காரர்கள் ஊருக்குள் வரிசை எடுத்து வரும்போது கம்பீரமாய் “என்னங்கடா அங்க சத்தம்” எனக் கேட்கும் தொணியாகட்டும், அர்ச்சனைத் தட்டில் தன்னை விட ஐநூறு ரூபாய் தட்சணை வைத்ததும் முறைத்தே அதை எடுக்க வைப்பதாகட்டும் அக்மார்க் ஜாதிவெறி கொண்ட தலைவராகவே மாறியிருக்கிறார் கவிதா பாரதி. அதிலும் அந்த விதவைப் பெண்ணை ஆணவக் கொலை செய்யுமிடத்தில், ஒட்டுமொத்த வெறியையும் கண்களில் காட்டிய நடிப்பு உண்மையிலேயே மிரள வைக்கிறது.

எல்லாவற்றை விடவும் படத்தில் மிகவும் கவர்ந்தது, கிளைமாக்ஸ் தான்.

தன் கூட்டத்திலிருந்து எவனுமே திருந்தக் கூடாது. அப்படியே திருந்தினால் அவன் உயிரோடு இருக்கக் கூடாது, என்று நனைக்கிற ஒரு ஊரை.. ஒரு தலைவனை அடையாளம் காட்டியிருக்கிறான் இந்த “படைவீரன்”.

  1. இவ்வளவு ” அம்சங்களும் (?)” இருந்து என்ன செய்ய?, திரைக்கதையில் கோட்டை விட்டுவிட்டீர்களே.. லாஜிக்கையெல்லாம் கடாசி விட்டீர்களே.. இந்த இரண்டு குறைகளும் இல்லாமல் இருந்த மணக்க மணக்க ஒரு “ஜாதி வெறி?” படம் பார்த்திருக்கலாம். ஜஸ்ட் மிஸ்!!
  • எல்லா புகழும் இயக்குநருக்கே!!