full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பத்மாவதி படத்திற்கு எதிரான மனு தள்ளுபடி

‘பத்மாவதி’ படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என எதிர்ப்பு எழுந்தது போராட்டம் வெடித்த நிலையில் திரைப்படம் வெளியிடும் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இப்படத்தில் ராணி பத்மினி வேடத்தில் நடித்த தீபிகா படுகோனே மற்றும் படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு தொடர்ச்சியாக மிரட்டல்கள் விடுக்கப்படுகிறது. டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியிடம் இருந்து மானத்தை காப்பாற்ற 12 ஆயிரம் பெண்களுடன் தீயில் இறங்கி உயிர் நீத்தவர் ராணி பத்மினி. ஆனால் பத்மாவதி படத்தில் அலாவுதீன் கில்ஜியை, ராணி பத்மினி காதலிப்பதுபோல் தவறாக காட்சிப்படுத்தி உள்ளனர் என்று போராட்டக்காரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. திரைப்படம் திரையிடத் தயாராகி வரும் நிலையில், அப்படத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கலாகின. ஆனால், அவற்றை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில், பத்மாவதி திரைப்படத்திற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அதில் ‘‘பத்மாவதி திரைப்படத்தை சென்சார் போர்டு தவிர, தலைசிறந்த மூன்று பல்கலைக்கழக வரலாற்று பேராசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் திரையிட வேண்டும். அவர்களின் ஒப்புதலுக்கு பிறகே பத்மாவதி படத்தை திரையிட வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், பத்மாவதி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள தகவல்கள் தெரியாமல் முன்கூட்டியே இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது எனக்கூறி உயர்நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.