சந்திரமுகிக்கு உருவம் கொடுத்தவர் இயக்கி நடித்துள்ள ‘பாப்பிலோன்’

News
சந்திரமுகிக்கு உருவம் கொடுத்தவர் இயக்கி நடித்துள்ள ‘பாப்பிலோன்’
ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு   ராஜா. பாப்பிலோன் என்றால் தமிழில் வண்ணத்துப்பூச்சி என அர்த்தமாம்.
அப்பா இல்லாத தனது குடும்பத்தை அன்பாகக் கவனித்து வருகிறார் ஹீரோ. எதிர்பாராமல் அவரது தங்கையின் வீடியோ ஒன்று கயவர்களின் கையில் சிக்குகிறது.. அவர்கள் அதன்மூலம் தங்கையை பிளாக்மெயில் செய்து பணம் பறிப்பதுடன், ஒரு கட்டத்தில் அவரைக் கடத்தவும் முயற்சிக்கின்றனர்..
இதில் விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் செல்கிறார் தங்கை.. கதாநாயகி மூலம் இந்த விபரம் அண்ணனுக்குத் தெரியவர, இதன் பின்னணியில் உள்ள கும்பலை நாயகன் எப்படி வேரறுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
கதாநாயகியாக ஸ்வேதா ஜோயல் என்பவர் நடித்துள்ளார். தங்கையாக சௌமியா மற்றும் அம்மாவாக ரேகா சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். பண்ணையார் கதாபாத்திரத்தில் பூராமு மற்றும் அவரது மகளாக அபிநயா நடிக்க, ‘மாரி’ புகழ் வினோத் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஷ்யாம் மோகன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.. இவர் சமீபத்தில் வெளியான காவியன் படத்திற்கு இசையமைத்தவர். அருள்செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.. பார்த்திபனின் வித்தியாச முயற்சியான ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு படத்தொகுப்பு செய்த சுதர்சன்  இப் படத்தின் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார்.
வத்தலகுண்டு, தாண்டிக்குடி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்து, தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறைவு பெற்றுள்ளது.
இந்தப் படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து இருக்கும் ஆறு ராஜா, கலை இயக்குர் தோட்டா தரணியின் குழுவில் ஆர்டிஸ்ட் ஆகப் பணியாற்றியவர்.. சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த பிளாக் பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி படத்தில் சந்திரமுகியின் ஓவியத்திற்கு வர்ணம் தீட்டியவர் இவர்தான்.
இந்தப் படத்திற்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் வேறு ஒரு கதாநாயகி. கொடைக்கானல் பகுதியில் படப்பிடிப்பு துவங்கிய இரண்டாவது நாளிலேயே, தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக் காரணம் காட்டி படப்பிடிப்பில் இருந்து கிளம்பி சென்றாராம்..
 பின்னர்தான் அவர் தனது காதலனின் ஈகோ டார்ச்சர் தாங்காமல் இந்தப் படத்தை விட்டு விலகியிருக்கிறார் என தெரிய வந்துள்ளது.. உடனடியாக ஸ்வேதா ஜோயல் என்கிற இன்னொரு கதாநாயகியை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை நடத்தி உள்ளார்கள்..
ஆனால் ஓடிப்போன அந்த கதாநாயகியை விட, இவர் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் படக்குழுவினர் அனைவருமே மிகுந்த சந்தோஷம் அடைந்துள்ளனர்