full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

நான் ராம் சாருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் நினைத்தது இந்தப் படம் தான் – இயக்குநர் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி!

 

நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், “பரியேறும் பெருமாள்” இயக்குநர் மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே.,கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும் போது,

“இந்தப் படத்தை பற்றி பேசுவதிலோ, முக்கியமான விசயங்களைப் பகிர்ந்து கொள்வதிலோ எனக்கு எந்த பயமும் இப்போது இல்லை. காரணம் ராம் சாரும், இரஞ்சித் அண்ணனும் எனக்கு தைரியத்தை தந்திருக்கிறார்கள். முதலில் நான் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த இந்த 12 ஆண்டுகளில் என் வளர்ச்சிக்கு பல வழிகளிலும் துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஜாலியான ஒரு படம் செய்யலாம் என்ற நோக்கத்தில் எழுத ஆரம்பிக்கப்பட்ட கதைதான் “பரியேறும் பெருமாள். ஆனால், போகப் போக அதன் வடிவமே மாறிப்போனது. சட்டக் கல்லூரி படிக்கும் போது நான் சந்தித்த, கடந்து போன பல மனிதர்களும், சம்பவங்களும் இந்தப் படத்தை வேறு தளத்திற்கு எடுத்துப் போயிருக்கிறது. இந்தக் கதையை கேட்டதும், உடனே ஆரம்பிக்கலாம் என முடிவெடுத்தவர் இரஞ்சித் அண்ணன். இந்தப் படத்தை நம்மால் மட்டுமே சிறப்பாக எடுத்து முடிக்க முடியும் என அவர் நம்பினார். ஒரு முதல் பட இயக்குநராக எனக்களிக்கப்பட்ட முழுமையான சுதந்திரம் தான் இந்தப் படத்தை நான் நினைத்த மாதிரி எடுக்க உதவி இருக்கிறது.

முதலில் இந்தப் படத்தின் இசை வேறு மாதிரி இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். அதற்காகத் தான் சந்தோஷ் சாரிடம் பேசினோம். அது மட்டுமல்லாமல், திருநெல்வேலி மண்ணின் மைந்தர்களையும், கலைஞர்களையும் பயன்படுத்தி இருக்கிறோம். முதலில் 5 பாடல்கள் தான் திட்டமிட்டோம், ஆனால் அவராகவே முன்வந்து இன்னொரு பாடலையும் போட்டுக் கொடுத்தார்.

கேமராமேன் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா இருவரும் இப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். கதிர், கயல் ஆனந்தி இருவரும் அந்த வாழ்க்கையை உள்வாங்கிக் கொண்டு நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் யோகி பாபு அண்ணனின் பங்களிப்பு மிகப் பெரியது. இப்படத்தில் கருப்பி என்கிற நாயின் கதாபாத்திரம் விவாதங்களை உண்டாக்கும். நான் ராம் சாருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் நினைத்தது இந்தப் படம் தான். இன்று இங்கு என் குடும்பத்தார்கள் யாரும் இல்லை, ஆனால் மொத்தமாக ராம் சார் இங்கிருக்கிறார்” என்று நெகிழ்வாக பேசினார்.