பார்த்திபனுடன் நீயா? நானா?வில் உதயநிதி

News

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்த படங்களை இதுவரை அவரே தயாரித்தார். அடுத்து அவரது நடிப்பில் வர இருக்கும் படம் ‘பொதுவாக என் மனசு தங்கம்’. இதை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. உதயநிதி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள இந்த படத்தில் சூரி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். தளபதி பிரபு இயக்கியிருக்கிறார்.

இது பற்றி கூறிய உதயநிதி ஸ்டாலின், “நான் முதன் முதலாக நடித்திருக்கும் கிராமத்து கதை ‘பொதுவாக என் மனசு தங்கம்’. இது சமூகத்துக்கு தேவையான விழிப்புணர்வை சொல்லும் படம். வேறு நிறுவனத்தில் நான் நடித்திருக்கும் முதல் படமும் இதுதான்.

ஊருக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று விரும்புகிற வேடத்தில் நான் நடித்திருக்கிறேன். வில்லனாக பார்த்திபன் நடித்திருக்கிறார். இருவருக்கும் நீயா? நானா? என்ற போட்டி இருக்கும். இதில் கதாநாயகி நிவேதா பெத்துராஜ், கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறார். என் கூடவே வரும் நண்பராக ‘டைகர் பாண்டி’ என்ற வேடத்தில் சூரி நடித்திருக்கிறார். இதுவரை நான் நடித்த படங்களில் இது மாறுபட்ட படம்.

பல கதாநாயகிகளுடன் நடித்திருக்கிறேன். அவர்களை தேர்வு செய்து நடிக்க வைத்தது இயக்குனர்கள் தான். நான் எதையும் முடிவு செய்வதில்லை.

ஒரே கதாநாயகியுடன் இரண்டு படங்களில் சேர்ந்து நடித்தால் கிசு கிசு வந்துவிடும். அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. கவலைப்படுவதும் இல்லை. நடிப்பு, தயாரிப்பு தவிர டைரக்டர் ஆகும் ஆசை எதுவும் இல்லை. அடுத்து எனது நடிப்பில் ‘இப்படை வெல்லும்’ படம் வருகிறது.” என்றார்.