குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழும் பட்டேல் சமூகத்தினர், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், இந்த போராட்டங்களுக்கு ஹர்திக் பட்டேல், தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் குஜராத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இந்த முறையும் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொள்ள வேண்டும் என பாரதீய ஜனதா முயற்சி செய்து வருகிறது.
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தின் தலைவர்கள் சிலரை பாரதீய ஜனதாவுக்கு இழுக்க முயற்சி நடைபெற்று உள்ளது.
ஹர்திக் பட்டேலின் முக்கிய உதவியாளர் நரேந்திர பட்டேல், தன்னை பாரதீய ஜனதாவில் சேர வேண்டும் என்றும், அதற்கு ரூ. 1 கோடி தருவதாக பாரதீய ஜனதா கூறியதாகவும் புகார் கூறி உள்ளார்.
நரேந்திர பட்டேல் வடக்கு குஜராத்தில் பாடிதர் அனாமத் அண்டோனான் சமிதிக்கு ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
இது குறித்து பட்டேல், தனக்கு முன்பணமாக ரூ.10 லட்சம் கொடுக்கபட்டது என்றும், மீதி பணம் இன்று தருவதாக உறுதி அளிக்கப்பட்டதாகவும் பத்திரிகையாளரிடம் நரேந்திர பட்டேல் கூறினார்.
இது குறித்து, பாரதீய ஜனதா தலைவர் வருண் பட்டேல், “பத்திரிகை மாநாட்டில் அவர் ரூ. 10 லட்சம் மட்டுமே ஏன் கட்டினார், ஏன் ஒரு கோடி ரூபாய் கட்டவில்லை ? பட்டேல் சமூகம் பாஜக மீது சாய்ந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் அரசியல் விளையாட்டுகளை நடத்துகிறது. ” என கூறினார்.