ஊரையே துரத்திவிட்ட காதல் ஜோடி

News

ஆர்.ஆர்.ஆர். புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.ராஜேந்திரன் தயாரித்திருக்கும் படம் ‘நாடோடி கனவு’. மாஸ்டர் மகேந்திரன் நாயகனாகவும், நாயகியாக சுப்ரஜாவும் நடித்துள்ளார். வீர செல்வா இயக்கியுள்ள இந்த படத்திற்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு சபேஷ் முரளி இசையமைத்துள்ளார். இம்மாதம் திரைக்கு வரவிருக்கிற இந்தப் படத்தில் கிரேன் மனோகர், விஜய் கணேஷ் மற்றும் கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஜிஜு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பொதுவாக ஒரு கிராமத்தில் தவறு செய்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பார்கள். அதுபோல் காதலர்களையும் ஊர் மக்கள் ஒதுக்கி வைப்பார்கள். ஆனால், இந்த படத்தில் காதலர்களை ஊரை விட்டு ஒதுக்கிவைக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதால், ஊர் மக்கள் அனைவரும் ஊரை காலி செய்து விடுகிறார்கள். எதற்காக இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டது என்பதை வித்தியாசமான திரைக்கதை மூலம் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர்.

இப்படத்தில் இடம்பெறும் ‘கருத்த மச்சான்’ என்ற பாடல் படப்பிடிப்பின் போது, கதாநாயகி சுப்ரஜாவிற்கு விஷப்பூச்சி ஒன்று கடித்து உடல் முழுவதும் அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்து திரும்பிய உடனே ஓய்வெடுக்காமல், மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் நாயகி சுப்ரஜா. பாடல்களை சீர்காழி சிற்பியும், அண்ணாமலையும் எழுதியிருக்கிறார்கள்.