இயக்குனர் ராம் இயக்கத்தில் ஒரு படம் வெளிவருகிறது என்றால் நிச்சயம் அனைவரின் பார்வை ஒரு நொடித் துளியாவது அதை எட்டிப் பார்க்கும்.
அப்படியாக ராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி, தங்கமீன்கள் ‘சாதனா’ ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ளது ‘பேரன்பு’.
முடக்குவாத நோயால் அவதிப்படும் தனது மகளோடு வாழ்ந்து வருகிறார் மம்முட்டி. மனைவி ஓடி விட்டாள். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ’உங்கள் மகளின் சத்தத்தால் நிம்மதியாக இருக்க முடியவில்லை’ எனக் கூறும் போது தந்தையாக மம்முட்டி படும் வேதனை கண்களை கணக்க வைக்கிறது.
யாரும் வேண்டாம் என்று தன்னந்தனியாக தனது மகளுடன் ஒரு அழகிய காட்டுப்பகுதிக்கு நடுவே இருக்கும் ஒரு வீட்டில் குடியேறுகிறார். பெண்களுக்கு மாதம் மாதம் வரும் அந்த 3 நாட்களில் தந்தையாக அனைத்து பணிவிடைகளும் தனது மகளுக்கு தானே செய்கிறார் மம்முட்டி. தனது மகள் மீது கொண்ட பாசத்தை அன்பை வார்த்தைகளில் கூட வெளிப்படுத்த இயலாது.
அந்த வீட்டில் அவர்களால் வாழ முடிந்ததா..??? பேரன்பு என்ற ஒன்று எங்கு சாத்தியமாயிற்று..??? பேரன்பு என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா என்பதை தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் இயக்குனர் ராம்.
மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி இக்கதைக்கு ஏற்ற ஒரு கதாபாத்திரம். அவர் ஒரு நடிகர் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இப்படத்தினை பார்த்த பிறகு அனைவராலும் மகா நடிகர் என்று கூட பாராட்டப்படலாம். ஒரு தந்தைக்கும் மகளுக்கும் நடக்கும் ஒரு வாழ்க்கைப் போராட்டத்தை கண்முன்னே வந்து நிறுத்துகிறார் மம்முட்டி.
தங்கமீன்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாதனா, இப்படத்தின் உடலுக்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறார். இந்த உயிரே நம் நாடித் துடிப்பை துடிதுடிக்க வைக்கிறது.
படத்தில் திருநங்கையாக வருபவர் காதல் தென்றலை வீசுகிறார். அதிலும், காரில் சென்று கொண்டு வெளிக்காற்றை அவர் ரசிக்கும் போது சொல்லாமல் பல வசனங்களை நம்மிடையே வீசிவிட்டுச் செல்கிறார்.
காட்சிக்கு காட்சியில் கண்களை மூடாமல் முழுப் படத்தையும் பார்க்கத் தூண்டுகிறது இந்த ‘பேரன்பு’. அன்பு கிடைக்காமல் ஏங்கும் ஒவ்வொரு இதயத்திலும் இந்த ‘பேரன்பு’ நிச்சயம் குடியேறி நிற்கும்.
பெண்களை பெற்ற ஒவ்வொரு தந்தைக்கும் இப்படத்தின் ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் உணர்வு நிச்சயம் புரியும்.
படத்திற்கு பலமாக இருப்பது ஒளிப்பதிவும் இசையும்…. பின்னனி இசையில் யுவன் ஷங்கர் ராஜா நம்மை கதையோடு நடைபயணம் போட வைக்கிறார்.
அஞ்சலி, சமுத்திரக்கனி, அஞ்சலி அமீர், பாவெல் நவகீதன் ஆகியோரின் கதாபாத்திரங்கள் படத்தில் பேசப்படுகிறது.
ராம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம்