“கற்றது தமிழ்”, “தங்க மீன்கள்” மற்றும் “தரமணி” படங்களின் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, அஞ்சலி, தங்க மீன்கள் சாதனா ஆகியோர் நடித்திருக்கும் “பேரன்பு” படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.
வெளியாவதற்கு முன்பே இப்படம் குறித்த எதிர்பார்ப்பு எகிறியிருக்கும் நிலையில், நெதர்லாந்தில் நடைபெற்ற தேசிய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு எல்லோரது பாராட்டுகளையும் வாரிக் குவித்திருக்கிறது.
கடந்த 28-ஆம்தேதி நெதர்லாந்தில் வெள்ளைக்காரர்கள் பெரும்திரளாக அமர்ந்திருந்த திரையரங்கில் ‘பேரன்பு’ திரைப்படத்தை ஃப்ரிமியர் காட்சியாகத் திரையிட்டனர்.
படத்தின் க்ளைமாக்ஸ் முடிந்தபிறகு வெள்ளைக்காரர்கள் அனைவரும் எழுந்துநின்று 5 நிமிடங்கள் தொடர்ந்து கரவொலி எழுப்பிக்கொண்டே இருந்திருக்கின்றனர். அதன்பின் தேனப்பன், ராம், சாதனா ஆகியோர் மேடை ஏற்றப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர். ‘பேரன்பு’ படம்குறித்து அந்நாட்டு ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, மூவரும் பதில் அளித்திருக்கின்றனர்.
முதன்முதலாக தமிழ்மொழியில் திரையிடப்பட்ட ‘பேரன்பு’ திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றிருப்பதால், நெதர்லாந்தில் திரைப்பட விழா நடத்தும்
‘ரோட்டர் டேம் உலக சினிமா திரப்பட விழா’ கமிட்டியினர் மகிழ்ச்சியாக உள்ளனர். இன்று, விருதுகளைத் தேர்வுசெய்யும் விமர்சகர்களுக்கான திரைப்படக்காட்சி திரையிடவிருக்கின்றனர். அதன்பிறகே ‘பேரன்பு’ திரைப்படம் எந்தெந்த விருதுகளைப் பெறப்போகிறது என்கிற விவரங்கள் வெளியாகும்.