தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் டைரக்டர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சருக்கு வணக்கம். தமிழகத்தில் பொதுமுடக்கம் தொடங்கி 150 நாட்கள் ஆகிவிட்டது. பட வெளியீடுகள் இன்றி திரையரங்கையும் மூடி, படப்பிடிப்புகளையும் நிறுத்தி, நூற்றைம்பது நாட்கள் ஆகிறது என்ற வேதனையை தமிழ்சினிமா முதன் முறையாக இப்போது சந்தித்துள்ளது. 80-க்கும் மேற்பட்ட படங்களும், படப்பிடிப்புகளும் தேங்கி நிற்கின்றது. எத்தனையோ ஏழைத் தொழிலாளிகளின் வயிறு பட்டினியாகக் கிடக்கிறது. தொழில் நுட்பக் கலைஞர்களின் சிறு சேமிப்புகள் கரைந்துள்ளது. பணம் போட்ட தயாரிப்பாளர்கள், பண உதவி செய்தவர்கள் என எல்லோரும் முதலீட்டின் மீதான வரவை எதிர்பார்த்து, இழப்பு மேல் இழப்பை சுமந்துகொண்டிருக்கிறார்கள். இந்நிலை தொடராமல் தடுத்து சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அளித்த அனுமதியைப் போல எங்களுக்கும் குறுகிய குழுவோடு, பொது இடங்களில் இல்லாமல், ஸ்டுடியோ அல்லது வீடுகளுக்குள் திரைப்பட படப்பிடிப்புகளைத் தொடர வழிவகை செய்ய, ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். எப்படிப்பட்ட வழிமுறைகளை, விதிகளோடு தந்தாலும் நிச்சயம் அதிலிருந்து மீறாது, தவறாது சீராக அவற்றைக் கடைப்பிடித்து, கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்போடு பணிசெய்து கொள்வோம் என உறுதி கூறுகிறோம்.”
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.