கூத்தப்பாடி கிராமத்தில் வசிக்கும் உதயநிதி ஸ்டாலின், வேலை ஏதும் செய்யாமல், தன் ஊருக்கு நல்லது செய்துக் கொண்டு, தேவையான வசதிகளை செய்து வருகிறார்.
பக்கத்து ஊரைச் சேர்ந்த பார்த்திபன் ஒரு புகழ்ச்சிப் பிரியர். அவரது தங்கையை கல்யாணம் செய்துகொண்டவரின் ஊருக்கு ஏகப்பட்ட வசதிகளைச் செய்துகொடுத்திருப்பதைப் பார்க்கும் உதயநிதி, தன் ஊருக்கும் அதுபோன்ற வசதிகள் வேண்டுமென்பதற்காக பார்த்திபனின் மகளான நிவேதா பெத்துராஜை காதலிக்க ஆரம்பிக்கிறார்.
ஆனால், உதயநிதிக்கு நல்ல பெயர் கிடைப்பதால், கடுப்பாகும் பார்த்திபன், அவரின் காதலுக்கு எதிராகச் செயல்படுகிறார்.
இதுத்தவிர, பார்த்திபன் ஊரில் கோவில் இல்லாததால் உதயநிதி ஊரில் உள்ள கோவிலில் பார்த்திபன் மகள் நிவேதா பெத்துராஜுக்கு சிறு வயதில் காது குத்து நிகழ்ச்சி நடத்தும்போது, சில காரணங்களால், அந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பார்த்திபனை விரட்டு கின்றனர். இதனால் கடுப்பாகும் பார்த்திபன், உதயநிதி ஊரில் உள்ள மக்கள் ஒவ்வொருத்தரையும் விரட்டி வருகிறார்.
தன் மகளை காதலித்து, ஊர் மக்களுக்கு நல்லது செய்து வரும் உதயநிதியையும் பார்த்திபன் விரட்ட முடிவு செய்கிறார். இறுதியில், பார்த்திபன், உதயநிதியை ஊரை விட்டு விரட்டினாரா? உதயநிதி, நிவேதா பெத்துராஜூடன் இணைந்தாரா? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் உதயநிதி ஸ்டாலின், முதல் முறையாக கிராமத்துப் பின்னணியில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். தனது ஊருக்கு தேவையானதை செய்யும் கிராமத்து இளைஞனாக நடித்து அசத்தியிருக்கிறார். துறுதுறு இளைஞனாக படம் முழுக்க நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவருக்கு நண்பராக வரும் சூரியுடன் சேர்ந்து அடிக்கும் கலாட்டாக்கள் ரசிக்கும் படி உள்ளது. சூரியின் காமெடி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
கிராமத்து பெண்ணாக வரும் நிவேதா பெத்துராஜ் அழகான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பாவாடை தாவணியில் அழகு தேவதையாக காட்சியளித்திருக்கிறார்.
தனக்கே உண்டான நக்கலுடன் கொஞ்சம் வில்லத்தனத்தையும் சேர்த்து ரசிக்க வைக்கிறார் பார்த்திபன். பார்த்திபனுடனே டிரைவராக வரும் மயில்சாமி படம் முழுக்க வந்து ரசிக்க வைத்திருக்கிறார். மொட்டை ராஜேந்திரன், நமோ நாராயணன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
ஊரை நேசிக்கும் ஒரு இளைஞன், தனது ஊரில் உள்ள அனைவரையும் காலி செய்ய சபதம் எடுக்கும் ஒருவரிடம் இருந்து தனது ஊரை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை கிராமத்து பின்னணியில் காமெடி கலந்து சிறப்பாக கொடுத்திருக்கிறார் தளபதி பிரபு. மேலும் சொந்த ஊரை யாரும் மறக்க கூடாது. சொந்த ஊரை விட்டு யாரும் வெளியூருக்கு வேலை தேடி செல்லக் கூடாது. ஊரில் இல்லாத வசதியை நாமாகவே உருவாக்க வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார். ஒரு சில இடங்களில் திரைக்கதையில் தோய்வு ஏற்பட்டிருக்கிறது. அதை சரி செய்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
டி.இமானின் இசையில் பாடல்கள் கிராமத்து சாயலில் வரவேற்பை பெற்றிருக்கிறது. பின்னணி இசையிலும் ரசிக்க வைத்திருக்கிறார். கே.டி.பாலசுப்ரமணியமின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
சினிமாவின் பார்வையில் `பொதுவாக எம்மனசு தங்கம்’ சிங்கம்.