மராட்டிய மாநிலத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது. இந்த மோதலில் ஒரு வாலிபர் பலியானார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் கொந்தளிப்பான சூழல் நிலவியது.
இந்த வன்முறையை கண்டித்து, நேற்று மராட்டிய மாநிலத்தில் முழு அடைப்புக்கு தலித் அமைப்பினர் அழைப்பு விடுத்தனர். இந்த முழு அடைப்பு போராட்டத்திலும் பல இடங்களில் வன்முறை நடைபெற்றன. வன்முறை தொடர்பாக 300 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் மாலை இந்த போராட்டத்தை திரும்ப பெறுவதாக பிரகாஷ் அம்பேத்கார் கூறியதையடுத்து, மாநிலத்தில் நிலைமை சீரானது.
இந்த நிலையில், மும்பையில் மாணவர்கள் தொடர்பான மாநாடு ஒன்று இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் தலித் தலைவரும் அண்மையில் குஜராத் சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான ஜிக்னேஷ் மேவானி மற்றும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித் ஆகியோர் கலந்து கொண்டு பேசுவதாக இருந்தது.
ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். நிகழ்ச்சி நடைபெற இருந்த அரங்கத்தில் கூடியிருந்த மாணவர்களையும் போலீசார் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, கடந்த 31 ஆம் தேதி புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரு பிரிவினருக்கு இடையே பகைமையை தூண்டு விதத்தில் பேசியதாக உமர் காலித் மற்றும் ஜிக்னேஷ் மேவானிக்கு எதிராக நேற்று இரவு புனே போலீசார் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்துள்ளனர்.