அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். நீட் தேர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் அமர்ந்து போராட்டம் நடத்தினர். நீட் தேர்வுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை, பெண் போலீசார் இழுத்துச் சென்று வெளியேற்றினர். இதையடுத்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது.
நீட் தேர்வை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்ததால் அவரது நினைவிடத்தில் போராட்டம் நடத்தியதாக, மாணவர்கள் தெரிவித்தனர். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர்.
அதேசமயம் கிண்டியில் நந்தனம் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.