கொரோனா ஊரடங்குக்கு பின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை தொடங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், மணிரத்னம் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மணிரத்னம், பொன்னியின் செல்வன் பட வேலைகளை கடந்த வருடம் தொடங்கினார். இந்த படத்தில் நடிக்க விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டனர். தாய்லாந்து காடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.
சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இருந்த நேரத்தில் கொரோனாவால் நிறுத்தப்பட்டது. சரித்திர கதை என்பதால் படத்துக்காக தலைமுடியை நீளமாக வளர்த்துள்ள நடிகர்கள் ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் அப்படியே இருக்கிறார்கள்.
ஆனால் ஊரடங்குக்கு பிறகும் படப்பிடிப்பை தொடங்குவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் ஆயிரக்கணக்கான துணை நடிகர்களை வைத்து போர்க்கள காட்சிகளை படமாக்க வேண்டி உள்ளது என்றும் நடிகர்களின் நெருக்கமான காட்சிகளும் உள்ளது என்றும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இதற்கு அதிக எண்ணிக்கையில் பெப்சி தொழிலாளர்களும் தேவைப்படுவார்கள்.
ஊரடங்குக்கு பிறகு படப்பிடிப்புகளில் சமூக விலகலை கடைபிடிக்கவும் அதிகமானோரை படப்பிடிப்பில் பயன்படுத்துவதை தவிர்க்கவும் அரசு விதிமுறைகள் வகுக்கும் என்று தெரிகிறது. குறைந்த எண்ணிக்கையில் நடிகர்களையும் பெப்சி தொழிலாளர்களையும் வைத்துக்கொண்டு பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை நடத்த முடியாது என்று கூறப்படுகிறது.
கொரோனா முழுமையாக ஒழிந்தபிறகே பட வேலைகள் தொடங்கும் கட்டாயம் உள்ளது. எனவே இடைபட்ட காலத்தில் அரவிந்தசாமியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க மணிரத்னம் திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்கான கதையை ஊரடங்கில் அவர் தயார் செய்து விட்டதாகவும் தகவல் பரவி வருகிறது.