ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில் இயக்குநர்கள் ராம், மிஷ்கின், பூர்ணா நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் ‘சவரக்கத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு நன்றி தெரிவித்தனர்.
அப்போது இயக்குநர் ராம் பேசும் போது, “பார்க்கத்தான் மிஷ்கின் பெரிய பயில்வான் மாதிரி இருப்பார். ஆனால் அவர் ஒரு குழந்தை மாதிரியானவர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரைக்கதை எழுதி வரும் மிஷ்கின் அதில் ரொம்பவே தேர்ந்திருக்கிறார். அவரின், கதையும், அதில் வரும் சிறுசிறு காமெடிகளும் அவ்வளவு அருமையாக இருக்கிறது.” என்றார்.
நடிகை பூர்ணா பேசும் போது, “எனது திரையுலகப் பயணத்திலேயே சவரக்கத்தி தான் மறக்க முடியாத படம். அந்த படத்தில் நடித்து முடித்த பின்னர் சில நாட்கள் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தேன். அதில் இருந்து என்னால் வெளியே வரமுடியவில்லை. சொல்லப்போனால் அப்படி வாழத் தான் நான் விரும்புகிறேன்.” என்றார்.
இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “என் தம்பி ஆதித்யா இந்த படத்தை சிறப்பாகவே இயக்கிவிட்டார். இனிமேல் அவரைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஒரு நல்ல நிலைக்கு வருவார் என்று நம்பிக்கை இருக்கிறது. இயக்குநர் ராம் இந்த படத்தில் அவரது முழு உழைப்பையும் கொடுத்து நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். இன்னமும் அவரது முழு சம்பளத்தை நான் கொடுக்கவில்லை. அதை பெரிதுபடுத்தாமல் படத்திற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்.” என்றார்