full screen background image
Search
Thursday 21 November 2024
  • :
  • :
Latest Update

பூர்ணா எடுத்த துணிச்சல் முடிவு

தமிழ் பட உலகின் முன்னணி டைரக்டர்களில் ஒருவர், மிஷ்கின். ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமான இவர், ‘அஞ்சாதே,’ ‘நந்தலாலா,’ ‘யுத்தம் செய்,’ ‘முகமூடி,’ ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,’ ‘பிசாசு,’ ‘துப்பறிவாளன்’ ஆகிய படங்களை டைரக்ட் செய்து இருக்கிறார். இவருடைய படங்கள் அனைத்தும் ஆங்கில படங்களுக்கு இணையான விறுவிறுப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்துபவை.

அவர் திரைக்கதை எழுதி, தயாரித்து, வில்லனாகவும் நடித்திருக்கும் புதிய படம், ‘சவரக்கத்தி.’ இந்த படத்தை அவரிடம் உதவி டைரக்டராக இருந்த ஜி.ஆர்.ஆதித்யா டைரக்டு செய்து இருக்கிறார். டைரக்டர் ராம் கணவராகவும், பூர்ணா மனைவியாகவும் நடித்திருக்கிறார்கள். கதைப்படி, இவர்களுக்கு 2 குழந்தைகள். மூன்றாவதாக பூர்ணா கர்ப்பமாக இருக்கிறார்.

பூர்ணாவை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு, அந்த 3 குழந்தைகளின் தாய் வேடத்துக்கு வேறு பிரபல கதாநாயகிகளை அணுகியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர், ‘பிரியமான’ நடிகை. இன்னொருவர், சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டவர். மற்றொருவர், இனிமையான நாயகி. இவர்கள் மூன்று பேருமே நடிக்க மறுத்து விட்டார்கள்.

“3 குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தால், பிரபல கதாநாயகர்களின் ஜோடியாக நடிக்க முடியாமல் போய்விடும். தொடர்ந்து ‘அம்மா’ வேடம் கொடுத்து விடுவார்கள்” என்று அதற்கு காரணம் சொன்னார்கள். நான்காவதாக, மங்களகரமான நடிகையை அணுகியிருக்கிறார்கள். அவரும், “என்னை அம்மாவாக பார்ப்பதில் உங்களுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?” என்று கேட்டு, நடிக்க மறுத்து விட்டாராம்.

4 பிரபல கதாநாயகிகள் நடிக்க மறுத்த நிலையில், அந்த மூன்று குழந்தைகளின் அம்மா வேடத்துக்காக பூர்ணாவை அணுகினார்கள். இவர், கேரளாவைச் சேர்ந்தவர். தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளிவந்த ‘கொடி வீரன்’ படத்தில், பூர்ணா வில்லி வேடத்தில் நடித்திருந்தார். அந்த வேடத்துக்காக, தலைமுடியை துணிச்சலாக மொட்டை அடித்துக் கொண்டார். மாறுபட்ட வேடங்களில் நடிக்க தயாராக இருந்த பூர்ணா, ‘சவரக்கத்தி’ படத்தில் 3 குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க சந்தோஷமாக சம்மதித்தாராம்.

பூர்ணா பேசும் தமிழ் வசன உச்சரிப்பில், சற்றே மலையாள வாசனை இருந்தது. அவருக்கு தமிழ் வசன உச்சரிப்பு பயிற்சி கொடுத்து, படத்தில் சொந்த குரலில் ‘டப்பிங்’ பேச வைத்து இருக்கிறார்கள்.