போர் திரைவிமர்சனம்
ஒளிப்பதிவாளர்கள் ஜிஷ்மி காளித் மற்றும் பிரஸ்லி ஆஸ்கார் டிசோசா ஆகியோரது பணி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. மாணவர்களுக்கு இடையே நடக்கும் மோதல் மற்றும் மாணவர்களின் வாகன பேரணி போன்ற காட்சிகளை ஒரே ஷாட்டில் படமாக்கி அசத்தியிருப்பவர்கள், படத்தை பிரமாண்டமாகவும் காட்டியிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர்கள் சஞ்சித் ஹெக்டே, துருவ் விஸ்வநாத், கவுரவ் காட்கிண்டி ஆகியோரது இசையில் பாடல்கள் புரியவில்லை என்றாலும் கேட்கும்படி இருக்கிறது. மாடர்ன் டேப் ஸ்கோர்ஸ்-ன் (ஹரிஷ் வெங்கட் & சச்சிதானந்த் சங்கரநாராயணன்) பின்னணி இசை சில இடங்களில் காட்சிகளுக்கு சுறுசுறுப்பளித்தாலும், பல இடங்களில் மந்தமாக்கும் விதத்தில் பயணித்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் பிரியங் பிரேம் குமார், காட்சிகளை தொகுக்க படாதபாடு பட்டிருப்பார் என்று படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. இருந்தாலும், இயக்குநர் எதையோ சொல்ல நினைத்து, எதை எதையோ காட்சிகளாக எடுத்ததை ஒரு முழுமையான திரைப்படமாக கொடுத்ததற்கு படத்தொகுப்பாளரை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
இயக்குநர் பிஜாய் நம்பியார் ரசிகர்களுக்கான திரைப்படமாக அல்லாமல் தனக்கான திரைப்படமாகவே இப்படத்தை இயக்கியிருக்கிறார். குறிப்பாக தான் மணிரத்னத்தின் சிஷ்யன் என்பதை நிரூபிப்பதற்காகவே காட்சிகளை வடிவமைத்திருப்பவர், மணிரத்னம் பாணியில் திரைக்கதையோ அல்லது கதாபாத்திரங்களையோ வடிவமைக்க தவறிவிட்டார்.
இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் மோதலை, கல்லூரி மாணவர்களின் வாழ்வியல் மற்றும் சாதி அரசியலோடு சேர்த்து சொல்லியிருந்தாலும், அதை அழுத்தமாக சொல்லாமல், போரடிக்கும் வகையில் சொல்லியிருக்கிறார். குறிப்பாக, படத்தில் இடம்பெறும் எந்த ஒரு கதாபாத்திரங்களும் ரசிகர்களிடத்தில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாமல், படம் முழுவதும் பெரும் குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தியிருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலவீனம்.
காட்சிகளை பிரமாண்ட பின்னணியோடு படமாக்குவதற்கும், கதாபாத்திரங்களை பவர்புல்லாக காட்டுவதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இயக்குநர் பிஜாய் நம்பியார், அதே முக்கியத்துவத்தை திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்களை வடிவமைத்ததில் காட்டியிருந்தால், அவரது குருநாதரின் ‘அக்னி நட்சத்திரம்’, ‘ஆயுத எழுத்து’ போன்ற படங்களின் வரிசையில் இந்த ‘போர்’ படமும் இடம்பிடித்திருக்கும்.
ரேட்டிங் 2.5/5