full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ப.பாண்டி – விமர்சனம்

பிக்கு, பீகே, பிங்க், சாய்ராட், ஸ்பார்ச்சிட் என வட இந்திய படங்களும் அங்கமாலி டைரீஸ், டேக் ஆப் என தென்னிந்திய படங்களுமாக இந்தி சினிமாவும் மலையாள சினிமாவும் ரொம்பவே பொறாமைப்பட வைக்கும்.

சினிமா என்கிற வீரியமிக்க கலையை, தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு அரைத்த மாவையே கொஞ்சம் டெக்னிக்கலாக தமிழ் சினிமா அரைக்கும்போது நிறைய ஆதங்கமாக இருக்கும். ஓடுகிற படங்கள் கூட பெரும்பாலும் யதார்த்தம் இல்லாமல் சினிமாத்தனங்களுடன் இருக்கும் நிலையில் சினிமாவையும் சமூகத்தையும்
பிரதிபலிக்கிற, சினிமாவையும் சமூகத்தையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிற திரைப்படங்கள் ஒரு சிலவாவது வரவேண்டும் என்ற ஆதங்கம் நீண்ட நாட்களாகவே இருந்தது.

அதையும் மீறி கடுகு போல ஒரு சில படங்கள் வந்தாலும் முக்கால் வாசி படத்திற்கு பின், முழுவதும் சினிமாவாகி மசாலா வாசம் தியேட்டரைத்தாண்டி வீடு வரை வந்துவிடுகிறது. இன்னொன்று கடுகு படம் பேசிய உளவியல்…. மிக மிக மோசமான உளவியல்… இந்த சமூகம் பெண்கள் மீது திணிக்கிற புனித அழுக்கின் இன்னொரு சாட்சி தான் கடுகு.

இடைநிலை பள்ளிக்கல்வி பயிலும் ஒரு சிறுமியை அமைச்சராக இருக்கும் அரசியல்வாதி ஒருவன், உள்ளுர் அரசியல்வாதியின் துணையுடன் பாலியல் வன்புணர்வு கொள்ள முயல்கையில் கதைநாயகி கதாபாத்திரத்தின் உதவியால் பாலியல் வன்புணர்வில் இருந்து தப்பிக்கிறாள். அதில் பித்துபிடித்தவள் போல ஆகிறாள். பேய் பிடித்திருக்கிறதோ என்று கோயிலுக்கு அழைத்துச்செல்கிறாள் அந்த சிறுமியின் அன்னை. 10ம் வகுப்பு கூட இருக்காதென்று நினைக்கிறேன். அவ்வளவு சின்னஞ்சிறிய பெண், நீச்சல் தெரிந்தும் தண்ணீருக்குள் மூழ்கி அத்தனை காத்திரமாக தற்கொலை செய்துகொள்கிறாள். இங்கே தான் பிரச்சினை.

எவனோ ஒரு கேடு கெட்டவன், தன்னை தொட்டுவிட்டதால் தான் செத்துப்போய்விட வேண்டும் என்று அந்த சிறுமிக்கு எது அறிவுறுத்தியது? யார் அறிவுறுத்தினார்கள். படம் பார்க்கும் அந்தப்பெண் வயதுடைய சிறுமியினர் யாருக்காவது இதே மாதிரி நிகழ்ந்தால் செத்துப்போக வேண்டும் என்று வலியுறுத்துகிறதா கடுகு. அதைத்தான் கடுகு படத்தின் கருத்தியலாக, பேசுபொருளாக எடுத்துக்கொள்ள வேண்டுமா? புனிதம், கற்பு என்கிற விசயங்களை வைத்து கலாச்சார விலங்குகள் பூட்டி பெண்களை ஏமாற்றும் வேலை தொடரவேண்டும் என்று கடுகு நிர்ப்பந்திக்கிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா?

சரி… பவர் பாண்டிக்கு வருவோம்…

குற்றம் கடிதல், உறியடி படங்கள் போல மிகச்சில படங்களே மாற்று சினிமாவாக, மாற்றங்களின் சினிமாவாக வருகிறது. அந்த வகையில் பவர் பாண்டி தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படமாக இந்தக்கால கட்டத்தின் தேவைப்படி எடுத்துக்கொள்ளவேண்டிய படமாக வந்திருக்கிறது.

பின்பாதியில் பவர்பாண்டி படம் பேசும் கருத்தியல், உணர்வியல், கதாபாத்திரங்களி்ன் உளவியலுக்காக பவர் பாண்டியை நான் நிரம்ப கொண்டாடுகிறேன். அந்த வகையில் இயக்குநர் தனுஷ் தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய கதவை திறந்து வைத்திருக்கிறார் என்றே சொல்வேன்.

சினிமாத்தனங்களுடன் கூடிய ஒரு சினிமா தான் பவர் பாண்டியும். ஆனால், ரேவதி என்கிற பூந்தென்றலின் வருகைக்கு பின்னுள்ள பவர் பாண்டி… நிஜமாகவே தென்றலாக இருக்கிறது. ரேவதி மடோனா செபாஸ்டியனின் வயதான சாயலில் இருப்பது ஒரு பக்கமிருக்க நடிப்பில் மிரட்டுகிறார். இயல்பான சுருங்கிய முகம், கொஞ்சம் சதைப்போட்டு விட்ட உடல் என்பதை சிரத்தை எடுத்து மறைக்க முற்படாமல் யதார்த்தமாக வந்து இதயம் நிறைகிறார் ரேவதி. ரேவதிக்கும் தனுசுக்கும் ராஜ்கிரணுக்கும் அன்பின் சிறப்பு
வாழ்த்துகள். அதிலும் வா, போ, போடா என்று அவர்கள் பேசிக்கொள்கிற மொழி…. சான்சே இல்லை. எந்த வயதிலும் காதலும், நேசமும், அன்பும், நட்பும் ஒரே மாதிரி தான் இருக்கும்… என்பதை ராஜ்கிரணும் ரேவதியும் அத்தனை உண்மையாக திரையில் நிகழ்த்துகிறார்கள். ரேவதியின் ஒவ்வொரு பார்வையும் அதற்கு ராஜ்கிரணின் ஒவ்வொரு அசைவும் 100 அர்த்தங்கள் சொல்லும் அந்த மொட்டை மாடிக்காட்சி… ப்ச். செம செம. கிரேட் தனுஷ்.

சில நிமிடங்களே வந்தாலும் டிடியின் கதாபாத்திரம் வெகு சிறப்பான சித்தரிப்பு. இனிவரும் காலத்தின் முன்னோட்டமாகவே டிடியின் கதாபாத்திரத்தை பார்க்கிறேன்.

வயதாகி விட்டதால் ஓரங்கட்டப்படும் அப்பாவாக, மகன் பிரசன்னாவிடம் கோபத்துடன் நியாயம் கேட்கும் ராஜ்கிரணின் பேச்சு, வயதாகி வீட்டில் மதிக்கப்படாமல் இருக்கும் அத்தனை அப்பாக்களின் குரலாகவே ஒலிக்கிறது.

மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று சில மனிதர்களே மிருகங்களாகி சக மனிதர்கள் மீது வன்முறை செய்து காயப்படுத்தி அடித்து சித்ரவதை செய்யும் காலகட்டத்தில் பவர் பாண்டி படம் முழுவதும் இறைச்சி வந்துகொண்டே இருப்பது மிகுந்த மகிழ்ச்சியான ஒன்று.

தனுஷ், மடோனா, பிரசன்னா, சாயா சிங், வித்யூலேகா, குழந்தை நட்சத்திரங்கள் என் பவர் பாண்டியின் பவராக அத்தனை கலைஞர்களுமே சிறப்பு.

பவர் பாண்டியில், ரேவதி ராஜ்கிரண் தாண்டி… ரொம்பவே பிடித்த கதாபாத்திரம் ரின்சனின் கதாபாத்திரம். சிறப்பான பங்களிப்பு. வாழ்த்துகள் ரின்சன்.

வயதான நேசம், திருமணம் முடிந்தவர்களின் பழைய காதல்… கொஞ்சம் விலகினாலும் வேறு அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்படுகிற மிக கூர்மையான உளவியலை மிக இலகுவாக கையாண்டிருக்கிறார் இயக்குநர் தனுஷ்.

கடைசிக்காட்சியில் ரேவதியின் “இங்கே தானடா இருக்கோம்…” என்கிற அர்த்தமுள்ள அன்பான வழியனுப்புதலும் அதன் பின் அந்த காத்திருப்பும் ராஜ்கிரணின் கையசைப்பும்… ஆஹா. ஆஹா.

வேல்ராஜின் ஒளிப்பதிவும் ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் பவர் பாண்டியின் ஆகச்சிறந்த பவராக திரையை அழகாக்குகின்றன. கண்களையும் காதுகளையும் அழகாய் ஆளுமை செய்கின்றன. பிற தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பும் சிறப்பு.

உலகப்பபுதுமையான புரட்சிப்படம் என்று நினைத்து படம் பார்க்கப்போகாதீர்கள். மிக எளிமையான படம் தான். இயல்பான படம் தான். பேசாப்பொருளை பேசிய வகையிலும், பேசவேண்டிய விசயங்களை பேச முற்பட்ட படம் என்ற வகையி்லும் பவர் பாண்டி எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.

சிறப்பான, புதிய சினிமாவின் இயக்குநராக தனுஷ், மிக சிறப்பான ஒரு படத்தின் மூலம் தன்னுடைய இயக்குநர் பயணத்தை தொடங்கி இருக்கிறார்.

தனுஷ், ராஜ்கிரண், ரேவதி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் அன்பின் இதமான இனிய வாழ்த்துகள். மகிழ்ச்சி. மிக்க மகிழ்ச்சி.

பவர்பாண்டியின் அங்கமாக இருக்கும் சகோதரர்கள் பாண்டிக்கும் மகேந்திரனுக்கும் அந்தோணிதாசனுக்கும் அன்பின் வாழ்த்துகள்.

– முருகன் மந்திரம்