நடிகர் பிரகாஷ்ராஜ் தனது நண்பரும், சமூக ஆர்வலமான கெளரி லங்கேஷ் கொலைக்குப் பின் அரசியலில் ஈடுபட்டு பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
தற்போது கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை எதிர்த்து பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்துக்கு நடுவே நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், “நான் இப்போதைய தேர்தல் அரசியலில் இல்லை. ஆனால் நான் கர்நாடகத்தில் அரசியலில் இருக்கிறேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எதிர்காலத்தில் தீவிர அரசியலில் ஈடுபடும் திட்டம் இருக்கிறது. எனது பிரசாரம் இன்னும் 10 வருடங்களுக்கு நீடிக்கும். அது கர்நாடகத்திலும் இந்த நாட்டிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்.
இப்போதைய நிலையில் கர்நாடகத்திலும், நாட்டின் மற்ற இடங்களிலும் பிராந்திய அளவில் புதிய கட்சி தேவைப்படுகிறது. அதற்கான நேரம் வந்தால் புதிய கட்சி தொடங்குவேன். ஆனால் கொள்கையே இல்லாமல் கட்சிகள் உதயமாகின்றன. இப்போதைக்கு அதற்குள் செல்லவில்லை. அதே சமயம் புதிய இயக்கம் உருவாகவும், தகுதியான தலைவரை உருவாக்கவும் உதவியாக இருப்பேன்.
எனது வாழ்க்கைப் பயணம் வித்தியாசமானது. எதையும் முன் கூட்டியே முடிவு செய்ய மாட்டேன். எல்லாம் இயற்கையாக தானாகவே அமைந்து விடுகிறது. அவசரமாக தேவைப்பட்டால் புதிய கட்சி உதயமாகும்.
கர்நாடக தேர்தலில் இப்போது நிற்கும் 3 முதல்-மந்திரி வேட்பாளர்களில் சித்தராமையா தான் சிறந்தவர். அனைத்து தலைவர்களும் ஜாதி, மத அடிப்படையில் நிற்கிறார்கள். சித்தராமையா மட்டுமே வளர்ச்சித் திட்டத்தை சொல்லி தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் சோசலிச பின்னணி கொண்டவர் ஆட்சியையும் சோசலிச கொள்கையுடன் நடத்திச் செல்கிறார். அவர் ஜாதி அரசியலில் ஈடுபடவில்லை.
பிரதமர் மோடி திடீர் என்று தேவேகவுடாவை பாராட்டுகிறார். இவர் மோடியை சந்திக்க பலமுறை நேரம் ஒதுக்க கேட்டும் பதிலே இல்லை. இது தேவேகவுடாவை அவமானப்படுத்துவது இல்லையா?
இப்போதைய நிலையில் பா.ஜனதா ஆட்சிக்கு வர முடியாத நிலை உள்ளது. இதனால் தேவேகவுடாவை பாராட்டுகிறார்.
நான் பிரதமர் மோடிக்கு எதிராக பிரசாரம் செய்வதால் எனக்கு வந்த இந்திப்பட வாய்ப்பு பறிபோனது. இந்திப்பட அதிபர்கள் எனக்கு வாய்ப்பு தர மறுத்துவிட்டனர். தென்னிந்திய பட உலகைப் பொறுத்தவரை எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
இந்த தேர்தலில் அனைவரும் வெளியே வந்து தலைவர்களின் பின்னணியை வைத்து வாக்களிக்க வேண்டும். பணம் மற்றும் ஜாதி அரசியலுக்கு பலியாகக் கூடாது. நல்ல கட்சியை தேர்வு செய்து மெஜாரிட்டி அளிக்க வேண்டும்.” என்று கூறினார்.