full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

தாய்ப்பாலும், நதிநீரும் வேறு வேறு அல்ல – காவிரிக்காக பிரகாஷ்ராஜ் அறிக்கை!!

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், காவிரி பிரச்சினையை எந்த அரசியல் கட்சியாலும் தீர்த்து வைக்க முடியாது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கட்சிகள் காவிரி விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வருகிறது என்று நேற்று செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ராஜ் கூறினார்.

இந்நிலையில் காவிரி விவகாரம் குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

“தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் நடக்கும் என்று எச்சரிக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போராக நடந்து வருகிறது.

நம்முடைய அதிகாரத்தை மட்டும் பார்த்துக் கொண்டால் போதும் என்கிற அரசியல்வாதிகளின் சுயநல எண்ணம்தான் இத்தனை ஆண்டு காலமாக காவிரி பிரச்சினை தீராமல் இருப்பதற்கு காரணம். காவிரி நீரை வைத்து விவசாயிகள் வாழ்ந்து வந்தார்கள். இப்போது அரசியல்வாதிகள் அதில் தான் பிழைப்பு நடத்தி கொண்டிருக்கிறார்கள். இப்படி காவிரியை வைத்து கலவரம் செய்கிறவர்கள் யாரும் காவிரி ஆற்றில் மணல் எடுக்கும் மாபியாக்களுக்கு எதிராக துரும்பை கூட கிள்ளிப்போடுவதில்லை.

நீராதாரங்களை ஆக்கிரமிப்பு செய்யும் எவரையும் அவர்கள் எதிர்த்து கேள்விகள் கேட்பதில்லை. நதி நீரை மாசுப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதில்லை. கர்நாடகத்துக்கும், தமிழ கத்திற்கும் நீண்ட காலமாக உள்ள காவிரி பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டிய நெருக்கடி உருவாகி உள்ளது. இனிமேலும் இந்த நதிநீர் அரசியல் தொடர்ந்தால் அது மீட்க முடியாத இழப்புகளை தரும் பேராபத்தில் முடியும்.

காவிரி நீர் பங்கீட்டில் இருக்கும் உண்மையான பிரச்சினைகளையும், அவற்றுக்கான நடைமுறை தீர்வுகளையும், தமிழக மற்றும் கர்நாடக மக்களுக்கு விளக்குவது அவசியமாகிறது. இரு தரப்பிலும் சமூக அக்கறை கொண்ட வல்லுநர்களின் துணையுடன் ஒரு ஆவணப்படம் எடுக்கும் முயற்சியை  “JUST ASKING FOUNDATION” எடுக்கிறது. உண்மைகள் மக்களை சென்று சேர அனைவரும் இணைந்து செயல்படுவது அவசியம்.

ஒரே தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிட்டு கொள்ளக்கூடாது என்பார்கள். ஒரு நதி நீரை குடித்து அதில் விவசாயம் செய்து வாழ்ந்த மக்கள் சண்டையிட்டுக் கொள்வதும் முறையல்ல. தாய்ப்பாலும், நதிநீரும் வேறு வேறு அல்ல. நதிநீரில் இருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாக சரியாகும்” என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.