ஸ்ரீதேவி பற்றி பேசுங்கள்.. அதே நேரம் ஆராயியையும் கவனியுங்கள்.. பிரசன்னாவின் வேண்டுகோள்!

General News
0
(0)

விழுப்புரத்தில் ஆராயி என்பவர் தாக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், அவரது எட்டு வயது மகன் அடித்துக் கொல்லப்பட்டான். மேலும், அவருடைய 14 வயது மகள் கொடூரமாக கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து எந்த விதமான செய்தியும் வெளிவந்து விடாத வண்ணம் கவனமாக தவிரக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்காக நடிகர் பிரசன்னா தனது குரலை பதிவு செய்திருக்கிறார். இது பற்றி அவரது டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்து உள்ள அவர்,

“இந்த சம்பவம் ஒரு பிரபலத்தின் மரணத்தால் மட்டுமே அதிகம் பேசப்படாமல் இருக்கிறதா, அல்லது வேறு காரணமா? கேரளாவில் மது என்ற இளைஞரைக் கொன்ற கும்பலைக் கைது செய்ததைப்போல இதிலும் நடவடிக்கை எடுக்கப்படுமா? மதுக்களும், ஆராயிகளும், பிள்ளைக் கொலைகளும், வன்புணர்வுகளும் நாள்தோறும் நடந்தேறும் நம் முற்றத்தை சீர் செய்யாத நாம், சிரியாவின் படுகொலைகளை எண்ணி உச்சுக்கொட்டி என்ன பயன்? மனிதம் மரித்ததெப்போது?”

என்று பதிவிட்டிருக்கிறார்.

இதையொட்டி எழுப்பப்பட்ட கேள்விக்கு அவரளித்த பதிலில்,

“திரையுலகில் முடிசூடா மகாராணியான ஸ்ரீதேவி அவர்களுக்கான மரியாதையை நாம கொடுத்துதான் ஆகணும். அவங்களைப் பத்தி பேசக்கூடாதுனு நான் ஒருபோதும் சொல்லலை. அதேசமயம், ஆராயி போன்ற சாமானிய மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைக்கான பின்னணிக் காரணத்தையும் இந்த உலகுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியத்துல இருக்கோம்.

விழுப்புரத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததைப் பத்தி நியூஸ்ல சரிவர சொல்லாமல் இருக்கிறது மிகப்பெரிய தவறு. ஸ்ரீதேவியின் மரணத்தை ஒருவகையில இயற்கை மரணம்னு சொல்லலாம். அவர் குளியலறையில் மயங்கி விழுந்து மரணம் ஏற்பட்டிருக்குதுனு சொல்றாங்க.

ஆனால், ஆராயி கொடூரமாகத் தாக்கப்பட்டதும், மகன் கொல்லப்பட்டதும், மகள் கூட்டுப் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டதும் அப்படியில்லை.

நம்ம நாட்டிலேயே மக்களைப் பாகுபாடோட பார்க்கும்போது, சிரியாவுல நடக்குற பிரச்னைகளுக்கு நாம வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்? 1000 பேருக்கு நடந்தால், அது பெரிய விஷயம். அதுவே ஒரு தனி நபருக்கு நடந்தால், சாதாரண விஷயமா? உயிரிழப்பு எங்க நடந்தாலும், அது ஒன்றுதான்.”

என்று பதிலளித்திருக்கிறார்.

 

 

 

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.