மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் முதல் சோலோ பெண் சூப்பர் ஹீரோ திரைப்படம் கேப்டன் மார்வெல். ப்ரீ லார்சன், சாமுவேல் எல் ஜாக்சன் ஆகியோர் நடிக்க, அன்னா போடென், ரையான் ஃப்ளெக் இயக்கியிருக்கிறார்கள். மார்வெல் ஸ்டுடியோஸ் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இத்திரைப்படம் மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தியாவிலும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமன்னா பாட்டியா, சமந்தா அக்கினேனி, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் டிஸ்னி இந்தியா தலைமை அதிகாரி பிக்ரம் துக்கல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுவரை 20 மார்வெல் சூப்பர் ஹீரோ படங்களை கொடுத்திருக்கிறோம். ஒவ்வொரு படத்திலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிக் கொண்டே வந்திருக்கிறார்கள். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்தின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியிருக்கிறார்கள். இது பெண் சூப்பர் ஹீரோவை பற்றிய ஒரு படம் என்பதால் தான் பெண்கள் தினமான மார்ச் 8ஆம் தேதி வெளியிட திட்டமிட்டோம். படம் முடிந்த பிறகு வரும் காட்சிகளை காணத்தவறாதீர்கள் என்றார் டிஸ்னி இந்தியா தலைமை அதிகாரி பிக்ரம் துக்கல்.
இந்த நிகழ்ச்சியில் காஜல் அகர்வால் தான் மார்வெல் காமிக்ஸ் மற்றும் படங்களின் மிகத் தீவிரமான ரசிகை என்று மற்ற நாயகிகள் மூவரும் ஒரே குரலில் ஒப்புக் கொண்டனர். காஜல் அகர்வாலும் மார்வெல் படங்களை பற்றிய மிக நுட்பமான விஷயங்களை அவ்வப்போது அனைவருடனும் பகிர்ந்து கொண்டார். தோர் தான் தனக்கு மிகவும் பிடித்த மார்வெல் கதாபாத்திரம் என்றும் கூறினார்.
அப்போது கேப்டன் மார்வெல் படத்தை பற்றிய தங்களுடைய எண்ணங்களையும், ட்ரைலர் பார்த்தவுடம் மனதில் தோன்றிய விஷயங்களையும் பகிர்ந்து கொண்டனர். சமந்தா அது பற்றி கூறும்போது, “ஒரு சக்தி வாய்ந்த பெண்ணை திரையில் பார்க்கும் போது நம்மாலும் எல்லாம் முடியும் என்ற நம்பிக்கையை நமக்கு தந்திருக்கிறது இந்த கேப்டன் மார்வெல்” என்றார். ஒவ்வொரு பெண்ணுக்கும் வாழ்வில் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அதை தாண்டி அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். சூப்பர் ஹீரோ படங்கள் அனைத்தும் கூட தற்போது யதார்த்தமாக மாறி வருகிறது என்றார் தமன்னா.
நம் நாட்டில் பெண்களை மையப்படுத்திய படங்கள் பெரிய பட்ஜெட்டில் தயாராவதில்லையே என்று கேட்டதற்கு, “பெண்களை வைத்தும் பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்கப்படுகின்றன. நிறைய பெண்களை மையப்படுத்திய படங்கள் இந்தியாவிலும் வந்து கொண்டிருக்கின்றன. கேப்டன் மார்வெல் சூப்பர் ஹீரோ படம் உலக அளவில் மிகப்பெரிய கதவுகளை திறந்து விட்டிருக்கிறது. நம் இந்திய சினிமாவில் கூட அருந்ததி போன்ற படங்களும் வந்திருக்கின்றன. இன்னும் நிறைய படங்கள் வந்து கொண்டிருக்கின்றன” என்றனர்.
கேப்டன் மார்வெல் மாதிரி உங்களுக்கு ஒரு நாள் சக்தி கிடைத்து ஏதாவது விஷயங்களை மாற்ற விரும்பினால் எதை மாற்றுவீர்கள் என கேட்டதற்கு, “தூய்மையை மேம்படுத்துவேன், பெண் சிசுக் கொலை, ஊழல் ஆகியவற்றை ஒழிப்பேன். உலக அமைதிக்காக தீவிரவாத நடவடிக்கைகளை ஒழிக்க வேண்டும். மக்கள் அனைவரும் அமைதியாக இருக்க, அதை நல்ல வழியில் உபயோகிக்க வேண்டும்” என்றார். மேலும், சினிமா பொழுதுபோக்குக்காக மட்டும் தான். யாரையும் திருத்தவோ, நாட்டை திருத்தவோ சினிமாக்கள் இல்லை. யாரையும் மாற்றவும் முடியாது” என்றார். ரகுல் ப்ரீத் சிங்கும் தீவிரவாதத்தை ஒழிப்பதை பற்றிய தன் விருப்பத்தை கூறினார்.
அவெஞ்சர்ஸ் தமிழில் எடுக்கப்பட்டால் யாரை எந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என கேட்டதற்கு, “விஜயை அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என சமந்தா மற்றும் காஜலும், அதில் சூர்யாவை நடிக்க வைக்கலாம் என ரகுல் பிரித் சிங்கும் கூறினர். ஹல்க் கதாபாத்திரத்திற்கு சமந்தா ஆர்யாவை சொல்ல, விஷாலை காஜல் தன் சாய்ஸாக கூறினார். தோர் கதாபாத்திரத்தில் மகேஷ்பாபு அல்லது சூர்யாவை தன் தேர்வாக தமன்னா சொல்ல, காஜல் அகர்வால் அஜித் மிகப் பொருத்தமாக இருப்பார் என கூற அனைவரும் அதை ஒப்புக் கொண்டனர். மேலும் கேப்டன் அமெரிக்கா கதாப்பாத்திரத்திற்கும் அஜித் தான் தன் சாய்ஸ் என காஜல் சொல்ல அரங்கமே அதிர்ந்தது. பாகுபலியை அவெஞ்சர்ஸ் டீமுக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பலாம் என தமன்னா கூற, அனைவரும் அதை ஆமோதித்தனர்.
ஃபிட்னஸ் நம் வாழ்வில் மிகவும் முக்கியமான அம்சம். நன்றாக சாப்பிடுவதற்காகவே நான் கூடுதல் நேரம் உடற்பயிற்சிகளை செய்வேன் என்றார் ரகுல் பிரீத் சிங். எனக்கு சினிமாவிலும் சரி, வாழ்க்கையிலும் சரி இலக்குகளை அடைவது என்பது மிகவும் சந்தோஷத்தை கொடுக்கும், ஃபிட்னஸிலும் இலக்குகளை அடைந்து வருகிறேன் என்றார் சமந்தா. யோகா எனக்கு மிகவும் பிடித்த விஷயம். எனக்கு உணவுகள் மிகவும் பிடிக்கும். அதனால் அதற்கேற்ற வகையில் உடற்பயிற்சிகள் மேற்கொள்வேன் என்றார் தமன்னா. மாரத்தான் ஓட்டம் என் சாய்ஸ். உடற்பயிற்சி கருவிகள் இல்லையென்றாலும் கூட பரவாயில்லை. தினமும் ரன்னிங் ஓடுங்கள், அது போதுமானது. என் அடுத்த படத்துக்கு களறி பயட்டு கற்று வருகிறேன் என்றார் காஜல் அகர்வால்.
நம்மை கொண்டாட தனியாக பெண்கள் தினம் என்பது தேவையில்லை. பெண்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளையும் செய்யக் கூடியவர்கள், அந்த திறமை பெண்களுக்கு உண்டு என்றார் ரகுல். நமக்குள் ஒரு சூப்பர் ஹீரோ இருக்காங்க என பெண்களான நாம் நம்பணும். எந்த ஒரு கடினமான சூழலிலும் கூட அதை தாங்கும், தகர்க்கும் ஒரு சக்தியை கடவுள் நமக்கு கொடுத்திருக்கிறார் என்றார் சமந்தா.