தமிழில் நிவின் பாலி – நஸ்ரியா நஷீம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த ‘நேரம்’ படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்த அல்போன்ஸ் புத்திரன், அடுத்ததாக மலையாளத்தில் இயக்கிய ‘பிரேமம்’ படத்தின் மூலம் அனைவர் மத்தியிலும் பேசப்படும் ஒரு இயக்குனரானார்.
‘பிரேமம்’ படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இந்நிலையில், அடுத்ததாக அவர் இயக்கும் படம் என்னவாக இருக்கும் என்பது பலரது கேள்வியாக இருந்தது. அதற்கு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனே விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறும்போது, என்னுடைய அடுத்த தமிழ் படத்தில் புதிதாக எந்தவொரு விஷயத்தையும் செய்யப்போவதில்லை. அடுத்து நான் இயக்கும் படத்திற்கு முன்னணி நடிகையும், அதேநேரத்தில் அவர் நல்ல பாடும் திறமையும் கொண்டவராக இருக்க வேண்டும் என்பதுபோல் தேடிக்கொண்டிருக்கிறேன். அதுபோல் கிடைத்துவிட்டால் இந்த படம் குறித்த அறிவிப்பை விரைவில் அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘பிரேமம்’ படம் தெலுங்கில் வெளியாகி பெரிய தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், இப்படத்தை தமிழிலும் ரீமேக் செய்ய வேலைகள் நடைபெற்று வந்தது. அல்போன்ஸ் புத்திரனே தமிழிலும் ரீமேக் செய்யவிருப்பதாகவும், சிம்பு கதாநாயகனாக நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது.
அல்போன்ஸ் புத்திரன் தன்னுடைய அடுத்த படத்தில் புதிதாக எதுவும் செய்யப்போவதில்லை என்று சொல்வதில் இருந்து பார்த்தால் அனேகமாக ‘பிரேமம்’ படத்தைத்தான் ரீமேக் செய்வாரோ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருந்தாலும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை அனைவரும் காத்திருக்கலாம்.