full screen background image
Search
Thursday 7 November 2024
  • :
  • :
Latest Update

வன மேம்பாட்டுப் பணிகளுக்காக ‘இளைய புரட்சி நடிகர்’ பிரபாஸ் வழங்கிய இரண்டு கோடி!

ஆந்திர மாநிலம் டண்டிகா அருகில் சுமார் 1650 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் காஜிபள்ளி நகர்ப்புற வன மேம்பாட்டுப் பணிகளுக்காக இளைய புரட்சி நடிகர்
பிரபாஸ் இரண்டு கோடி ரூபாயை வன அலுவர்களிடம் வழங்கினார். ‘பசுமை இந்தியா சவால்’ திட்டத்தின் கீழ் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியின்
மூலம் உருவாக்கப்பட இருக்கும் சுற்றுச் சூழல் பூங்காவுக்கு பிரபாஸின் தந்தையின் பெயரான யூ.வி.எஸ்.ராஜு அவர்களின் பெயர் சூட்டப்படவுள்ளது.
பிரபாஸ் தத்தெடுத்திருக்கும் இந்த வனப் பகுதி, ஹைதரபாத் அவுட்டர் ரிங் சாலையில், ஹைதரபாத்துக்கு 20 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது. இதற்கான
அடிக்கல்லை, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.சந்தோஷ்குமார், தெலங்கானா மாநில சட்டம் மற்றும் எண்டோவ்ன்மென்ட் அமைச்சர்
இந்திராகரன் ரெட்டி அல்லோலா ஆகியோருடன் பிரபாஸ் நட்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் அந்த வனப் பகுதியை, தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கோபுரம் ஒன்றிலிருந்து மூவரும் பார்வையிட்டனர். பின்னர் வனப் பகுதியில் மரக் கன்றுகளும் நட்டனர். இந்த வனப்பகுதியில் ஒரு சிறுபகுதி

நகர்ப்புற வனப் பூங்காவாக மாற்றப்படும் எனவும், மூன்று தொகுதிகளாக விரிந்திருக்கும் எஞ்சிய பகுதிகள் அரியவகை மூலிகைகள் மற்றும் தவரங்களைக் கொண்டன என்றும் அவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக இருக்கும் எனவும் வன அலுவலர்கள் தெரிவித்தனர். வன அலுவலர்கள் மேலும் கூறும்போது, மொத்தமுள்ள 1650 ஏக்கர் பரப்பையும் வேலி அமைத்துப் பாதுகாப்பதோடு, சுற்றுச் சூழல் பூங்கப் பணிகளும் உடனடியாகத் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தனர். பூங்காவுக்கு வாசல் அமைப்பது, வெளியில் இருந்தே பூங்காவினுள் இருப்பனவற்றைப் பார்க்கும் வசதிசெய்வது, நடைபாதைகள் உருவாக்குவது, பார்வைக் கோபுரங்கள் அமைப்பது, பூங்காவினுள் அமரும் கூடாரங்கள் ஏற்படுத்துவது மற்றும் மூலிகைப் பண்ணை அமைப்பது ஆகிய பணிகள் முதற் கட்டத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர். ஆக்கிரமிப்புகளைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.

பிரபாஸ், தமது நண்பரும் மாநிலங்களவை உறுப்பினருமான, மாண்புமிகு ஜோகினபள்ளி சந்தோஷ்குமாரின் செயல்பாடுகள் இந்த வனப் பகுதியைத் தத்தெடுக்கத் தமக்கு உத்வேகம் அளித்ததாகவும் வருங்காலங்களில் பணிகளின் முன்னேற்றத்தைப் பொருத்துக் கூடுதல் நிதியைத் தவணைமுறையில் அளிக்க இருப்பதாக்வும் தெரிவித்தார். ஹைதரபாத் நகரின் நுரையீரல் பரப்பை அதிகரிக்கும் வண்ணம் வன மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளுமாறு வன அலுவலர்களை பிரபாஸ் கேட்டுக்கொண்டார். மாநிலங்களவை உறுப்பினர், அமைச்சர் மற்றும் வன அலுவலர்களுக்கு பிரபாஸ் நன்றி தெரிவித்தார். சந்தோஷ்குமார் கூறும்போது, வெகு விரைவில் பல தொழிலதிபர்களும் காப்புக்காடுகளைத் தத்தெடுக்க முன்வருவார்கள் என்றும் விரைவில் அந்தப் பட்டியலைத் தாம் வெளியிடப்போவதாகவும் தெரிவித்தார். கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளால் மிகச் சிறிய அளவிலேயே இந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பிரபாஸ் மற்றும்

சந்தோஷ்குமார் ஆகியோருடன் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் இந்திராகரன் ரெட்டி, சிறப்பு தலைமைச் செயலர் சாந்திகுமாரி, முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் ஆர்.ஷோபா, சமூக வன முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் ஆர்.எம்.டொப்ரியால், முதலமைச்சரின் சிறப்பு அலுவலர் பிரியங்கா வர்கீஸ், சங்கா ரெட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ஹனுமந்த ராவ், காவல்துறைக் கண்காணிப்பாளர் சந்திரசேகர் ரெட்டி, மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ்வர் ராவ், ஆகியோருடன் வனத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.