முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 45 நிமிடம் நடைபெற்றது. சந்திப்பின் போது எம்.பி.க்கள் டாக்டர் மைத்ரேயன், அசோக்குமார் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டியில், “பிரதமர் மோடியை சந்தித்து, தமிழ்நாட்டின் பிரச்சினைகள், முக்கிய தேவைகள், அதற்கு மத்திய அரசின் நிதி உதவி பற்றி பேசினோம். தமிழ்நாட்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை கடந்த 2 ஆண்டுகளாக சரியாக பெய்யாமல் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. கிராமங்கள் முதல் மாநகர் வரை குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு உரிய நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். ஆடு, மாடுகளுக்கு கூட தீவனம் கிடைக்காத சூழ்நிலை உள்ளது. அதையும் எடுத்துச் சொன்னோம்.
விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடனைத் திரும்ப செலுத்த முடியாத நிலை இருப்பதால், அந்த கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தினோம். அத்திக்கடவு–அவினாசி திட்டத்துக்கு போதிய நிதியைத் தந்து உதவுமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்தோம்.
அரசிதழில் கூறியபடி, காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகிய இரண்டையும் உடனே அமைக்க வேண்டும் என்று கேட்டோம். விவசாயிகள் பிரச்சினையில் தனிக்கவனம் செலுத்தவும் கோரினோம்.
‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், மருத்துவ மேற்படிப்பில் அரசு பணியில் உள்ளவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம்.
தொழிலாளர்கள் நலன் கருதி, சேலம் உருக்காலை பங்குகளை தனியாருக்கு விற்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொண்டோம். தமிழக மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் கோரினோம். இதே கோரிக்கையை ஜெயலலிதா பலமுறை வலியுறுத்தி இருக்கிறார். நாங்கள் மீண்டும் வலியுறுத்தினோம்.
டாக்டர் மைத்ரேயன் எம்.பி. தலைமையில் 12 எம்.பி.க்கள் ஜனாதிபதியை சந்தித்து ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மனு அளித்தனர். அந்த மனு, உள்துறை மூலம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. தலைமைச் செயலாளர் இதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமரிடமும் இதை வலியுறுத்தினோம்.
எங்கள் கோரிக்கைகளை எல்லாம் பிரதமர் கவனமுடன் கேட்டு, பரிசீலிப்பதாக கூறினார். தமிழக பிரச்சினைகள் பற்றி மட்டுமே பேசினோமே தவிர, அரசியல் பிரச்சினைகள் பற்றி பேசவில்லை.” என்று கூறினார்.