full screen background image
Search
Friday 8 November 2024
  • :
  • :
Latest Update

விஜய் 62 படப்பிடிப்பு விவகாரம்… விளக்கமளித்த தயாரிப்பாளர் சங்கம்

தியேட்டர்களில் புதிய படங்களை திரையிடும் டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பட அதிபர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளதால் திரையுலகம் முடங்கி உள்ளது. கடந்த 16-ஆம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.

இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடந்து வந்த 30-க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், தடையை மீறி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் விஜய்யின் 62-வது படத்தின் படப்பிடிப்பு தடையை மீறி நடந்து வருவதாக தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் அவரது டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அதில், “விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னை விக்டோரியா ஹாலில் நடந்து வருகிறது. அது எப்படி தயாரிப்பாளர் சங்கம் அதற்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்க முடியும். ஒற்றுமையை குலைக்காதீர்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விஜய் பட ஷுட்டிங் தொடர்பாக தயாரிப்பாளர் சங்க செயலாளர் எஸ்.எஸ்.துரைராஜ் இதுகுறித்து ஆடியோ வடிவில் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், படப்பிடிப்பு நிறுத்தம் குறித்து கூட்டம் நடத்தப்பட்ட போது, எந்த தயாரிப்பாளராவது ஒன்று, இரண்டு நாட்கள் அனுமதி கேட்டால், அதுகுறித்து விவாதித்து அனுமதி அளிக்க முடிவு செய்திருந்தோம். அந்த வகையில், செட் அமைப்பது உள்ளிட்ட முக்கிய பணிகள் அல்லது படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருந்தால் கூட்டத்தில் பேசி அந்த படத்திற்கு சிறப்பு அனுமதி வழங்கலாம் என்று பேசி முடிவு செய்திருந்தோம்.

அந்த வகையில் சன் பிக்சர்ஸ் (விஜய் 62), சமுத்திரக்கனி (நாடோடிகள்-2), 18 கிராஸ் பிக்சர்ஸ், ஆண்டோ ஜோசப் உள்ளிட்ட 4 பேர் படங்களுக்கு அனுமதி கேட்டனர். எனினும் கடந்த 16-ஆம் தேதி படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, அதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் ஆலோசித்த பின்னரே தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டே சிறப்பு அனுமதி அளித்திருக்கிறோம்.

இதில் விஜய் படத்திற்காக ஐதராபாத்தில் இருந்து ஸ்டன்ட் கலைஞர்கள் பலர் சென்னை வந்து பணிபுரிந்து வருகின்றனர். அதற்காக முறைப்படி அனுமதி வாங்கப்பட்டுள்ளது. அதேபோல் சமுத்திரக்கனியும் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டே படப்பிடிப்பு நடத்துகிறார். இந்த படங்களுக்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் மட்டுமே அனுமதி அளித்துள்ளோம்.

இதுதொடர்பாக சந்தேகம் ஏதேனும் இருப்பின் தயாரிப்பாளர் சங்கத்தை தொடர்பு கொள்ளலாம். வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் துரைராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.